பாரம்பரியத்தை பறைசாற்றும் பனைமரத் தொழில்
பனை மரத்தில் இருந்து மருத்துவ குணம் மிகுந்த நுங்கு, தவுன், கிழங்கு, பதனீர், கருப்பட்டி, பனங்கற்கண்டு, பனம்பழம், குருத்து உள்ளிட்ட உணவுப்பொருட்கள் கிடைக்கின்றன.;
வறட்சியை தாங்கும் வலிமைக்கும், நீரில்லாவிட்டாலும் வளரும் செழுமைக்கும் அடையாளமாகத் திகழ்வது பனை மரங்கள். 'பூலோக கற்பகத்தரு' என்று இவை அழைக்கப்படுகின்றன. அடி முதல் நுனி வரை அனைத்தையும், மனித சமுதாயத்துக்கு அர்ப்பணித்திருக்கும் ஒரு மரம் இருக்குமேயானால், அது பனை மரம் மட்டுமே. மாநில மரமாக, தமிழ்நாடு அரசு அங்கீகரித்திருப்பதில் இருந்தே அதன் பெருமையை நாம் உணர முடியும்.
உலகில் 108 நாடுகளில் பனை மரங்கள் உள்ளன. இந்தியாவில், தமிழகத்தில்தான் பனை மரங்களின் எண்ணிக்கை அதிகம். அழிந்து கொண்டிருந்த பனை மரங்களின் அருமையை, தற்போது மக்கள் உணரத் தொடங்கி இருக்கிறார்கள். இதற்கு அடையாளமாகத் தான், தமிழகத்தின் பல இடங்களில் பனை விதைகள் நடவு செய்யும் பணி மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது.
பனை மரத்தில் இருந்து மருத்துவ குணம் மிகுந்த நுங்கு, தவுன், கிழங்கு, பதனீர், கருப்பட்டி, பனங்கற்கண்டு, பனம்பழம், குருத்து உள்ளிட்ட உணவுப்பொருட்கள் கிடைக்கின்றன. இதைத்தவிர ஓலை, மட்டை, நார், ஈர்க்குகள், பனங்கட்டை, சில்லாட்டை உள்ளிட்ட பொருட்கள் பல்வேறு வகைகளில் பொதுமக்களுக்கு பயன்படுகிறது. மண் அரிப்பை தடுப்பதில் பனைமரங்களுக்கு மகத்தான பங்கு உண்டு. தன்னிகர் இல்லாத தமிழ் இலக்கியங்கள் இன்று நம் கரங்களில் தவழ்ந்து கொண்டிருப்பதற்கு பனை ஓலைகளே (ஓலைச்சுவடி) காரணம் என்பதை மறுக்க முடியாது.
* ஆண்-பெண் மரம்
பனை மரங்களை சார்ந்து பல்வேறு தொழில்கள் உள்ளன. இதில் பிரதான தொழில் எதுவென்றால், அது பதனீர் இறக்குவது தான். விண்ணைத் தொடும் ஆசையில் வளரக்கூடிய பனை மரத்தில் ஏறி, அதன் பாளையை கடிப்புகளால் (இடுக்கி) நைத்து, பதனீர் இறக்கும் தொழிலாளர்களின் மதிநுட்பம் சிறப்புக்குரியது.
ஆண், பெண் என்ற இருவகை பனைமரங்களில் இருந்தும் பதனீர் இறக்கலாம். ஆண் பனையை 'அலகு பனை' என்றும், பெண் பனையை 'பருவ பனை' என்றும் அழைக்கின்றனர். குறிப்பிட்ட காலத்தில் ஆண் பனையும், பெண் பனையும் பாளைகள் விடுகின்றன. அந்த பாளைகள் தான் பதனீரின் பிறப்பிடம். ஆண் பனையில் இருந்து 2 விதங்களில் பதனீர் இறக்கப்படுகிறது.
ஆண் பனையின் பாளைகள், மனிதனின் கை விரல்களை காட்டிலும் சற்று நீளமானதாக இருக்கும். விரல்களை போல இருப்பதால், இதற்கு 'அலைவிரல்' என்று பெயர். அதனை கடிப்புகளால் (இடுக்கி) நைத்து, பதனீர் இறக்குவது ஒருமுறை. ஆனால் 'அலைவிரல்' வெளியே வருவதற்கு முன்பே பாளையை நைத்து பதனீர் இறக்குவது மற்றொரு முறை. இதற்கு 'கட்டுப்பாளை' என்று பெயர்.
* பதநீர் இறக்குதல்
பெண் பனையை பொறுத்தவரை, பாளையில் குரும்பைகள் வெளியே வருவதற்கு முன்பு, கடிப்பால் நைத்து பதனீர் இறக்க வேண்டும். இல்ைலயெனில், குரும்பைகள் முற்றி நுங்காகி விடும். பின்னர் அது பனம்பழமாகி, விதைகள் கிடைக்கும். அந்த விதைகளை மண்ணில் புதைத்து வைத்து 90 நாட்கள் கழித்து தோண்டி பார்த்தால் சுவை மிகுந்த கிழங்கு கிடைக்கும். அதனை அப்படியே விட்டு விட்டால் மீண்டும் பனைமரம் உருவாகி விடும்.
பதனீர் இறக்குவதற்காக ஒவ்வொரு பாளையையும், 3 நாட்கள் கடிப்பால் நைக்க வேண்டும். 4-வது நாளில் பாளையை சீவி விட்டால் சொட்டு, சொட்டாக பதனீர் விழும். பதனீர் என்பது ஒரு காரணப்பெயர். பதப்படுத்தப்பட்ட நீர் என்பதே 'பதனீர்' என்றாகி விட்டது. பதனீரை சேகரிக்க பாளையில் மண்ணால் ஆன கலயம் கட்டப்படுகிறது. அதற்குள் சுண்ணாம்பு தடவ வேண்டும். அப்போது தான் பதனீர் கெட்டுப்போகாமல் இருக்கும். கருப்பட்டி தயாரிக்க உதவும்.
கலயத்தில் சுண்ணாம்பு தடவாமல் விட்டால், புளிப்பு சுவை ஏற்பட்டு அது 'கள்' ஆகி விடும். பனைமரத்தில் ஏறி தினமும் இருவேளை, பாளைகளை சீவி விட வேண்டும். சில பனைமரத்தில், 3 வேளை பாளைகளை சீவி விடுவார்கள். அதிகாலையில் தொடங்கும் இந்த தொழிலாளர்களின் உழைப்பு, இரவு வரை நீடிக்கும். ஓய்வு என்பது இவர்களுக்கு சில மணிநேரம் மட்டும்தான்.
* கருப்பட்டி
எந்த தொழிலிலும் இல்லாத வகையில், பனைமரத்தொழிலில் மனித உழைப்பு அதிகமாக உள்ளது. இந்த தொழில், தனிநபர் சார்ந்தது அல்ல. ஒட்டு மொத்த குடும்பத்தினரும் உழைக்க வேண்டியதிருக்கும். பதனீரை சேகரித்து, பெரிய அண்டாவில் ஊற்றி தீமூட்டி அதனை காய்ச்சும் பணியில் தொழிலாளர்களின் குடும்பத்தினர் ஈடுபடுகின்றனர். கொதி பதனீர், வற்று பதனீர், கூல் பதனீர் என பல கட்டத்தை அடைந்து, இறுதியாக கருப்பட்டிக்கு ஏற்ற பருவம் வரும்.
அப்போது அண்டாவை கீழே இறக்கி அகப்பையால் கிண்டி விடுவார்கள். அதன்பிறகு தேங்காய் சிரட்டையில் ஊற்றினால், கருப்பட்டி தயாராகி விடும். மண் பானையில் ஊற்றி கருப்பட்டியை பயன்படுத்துவோரும் இருக்கிறார்கள். இதேபோல் கற்கண்டும் பதனீரில் இருந்து தயாாிக்கப்படுகிறது. பனை மரம், பல்வேறு காரணப்பெயர்களை தன்னகத்தே கொண்டுள்ளது. இதேபோல் பனைமரத் தொழிலாளர்கள் பயன்படுத்தக்கூடிய பொருட்கள் காரணப் பெயர்களாகவே உள்ளன. இது பாரம்பரியத்தை பறைசாற்றுவதாக உள்ளது.
* அரிவாள் பெட்டி
பதனீர் இறக்கும் பணியில் ஈடுபடும் தொழிலாளர்கள் அன்றாடம் பயன்படுத்துகிற ஒரு பொருள் அரிவாள் பெட்டி. நாரால் தொடுக்கப்பட்ட இந்த பெட்டியை, தங்களது இடுப்பில் கட்டியபடி தொழிலாளர்கள் பனையில் ஏறுவார்கள். அரிவாள்களை வைக்கக்கூடிய பெட்டி என்பதால், அதற்கு 'அரிவாள் பெட்டி' என்று பெயர். 2 வித அரிவாள்களை, பனை மரத் தொழிலாளர்கள் பயன்படுத்துவார்கள். அதில் ஒன்று 'பாளைஅரிவாள்'. இது பிளேடை காட்டிலும் பல மடங்கு கூர்மையானது.
பனைமரத்தில் ஏறி பாளைகளை சீவி விடுவதற்கு மட்டுமே இந்த அரிவாள் பயன்படுத்தப்படுகிறது. தினமும் குறைந்தபட்சம் 5 முறையாவது, கல்பொடியை பயன்படுத்தி இந்த அரிவாளை தொழிலாளர்கள் தீட்டி கூர்மைப்படுத்துவர். மற்றொரு அரிவாளுக்கு 'மட்டை அரிவாள்' என்று பெயர். இது பனைமரத்தில் ஏறி மட்டையை வெட்டவும், ஓலைகளை அறுத்து விடவும், கறுக்கு கிழிக்கவும், சில்லாட்டையை களைந்து விடுவதற்கும் பயன்படுத்தப்படுகிறது.
'சுண்ணாம்பு பெட்டி' என்ற ஒன்றை பனைமரத் தொழிலாளர்கள் பயன்படுத்துவார்கள். இது ஓலையால் செய்யப்பட்டது. அரிவாள் பெட்டிக்குள் வைத்திருக்கும் வகையில் சிறிய பெட்டி போல இருக்கும். இதுவும் காரணப்பெயர் தான். அதாவது பாளையில் கட்டப்பட்ட கலயத்தில் தேய்ப்பதற்காக இந்தப்பெட்டியில் தான் சுண்ணாம்பை கொண்டு செல்வார்கள். சுண்ணாம்பு வைத்திருக்கும் பெட்டி என்பதால் அதற்கு 'சுண்ணாம்பு பெட்டி' என்று பெயர்.
* பனையும், பெயர்களும்...
சுண்ணாம்பை கலயத்தில் தேய்ப்பதற்கு பயன்படுத்தக்கூடிய மட்டைக்கு 'கலக்கு மட்டை' என்று பெயர். பாளையில் கட்டப்பட்ட கலயத்தில் விழுந்த பதனீரை சேகரிக்க தகரத்தால் ஆன பாத்திரத்தை தொழிலாளர்கள் மேலே எடுத்து செல்வார்கள். கீழே விழுந்து விடாதபடி தங்களது இடுப்பு பகுதியில் கட்டியிருக்கும் அரிவாள் பெட்டியுடன் அதனை தொங்க விட்டிருப்பர். இதற்கு 'போட்டேறி' என்று பெயர். அதாவது தாங்கள் பனை ஏறும்போது கொண்டு செல்வதால் இதற்கு அப்பெயர் ஏற்பட்டது.
பனையில் இருந்து பதனீரை சேகரித்து, அதனை ஊற்றி வைக்கும் பாத்திரத்துக்கு 'வைத்தேறி' என்று பெயர். தரையில் வைத்திருப்பதால் அதற்கு அப்பெயர் ஏற்பட்டது.
பனைமரங்களும், அதனை நம்பி உள்ள தொழிலாளர்களும் பைந்தமிழர்களின் பாரம்பரியத்தை சுமந்து கொண்டிருக்கிறார்கள் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. எனவே நாளுக்குநாள் நலிவடைந்து கொண்டிருக்கும் அந்த தொழிலை போற்றி பாதுகாக்க வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது.