நாடு முழுவதும் குடிநீரில் அதிக அளவில் நச்சு ரசாயனம் கலப்பு; ஆய்வில் அதிர்ச்சி தகவல்

நாடு முழுவதும் குடிநீரில் நானில்பினால் என்ற நச்சு ரசாயனம் அதிக அளவில் கலந்து உள்ளது என ஆய்வு ஒன்று அதிர்ச்சி தகவலை வெளியிட்டு உள்ளது.

Update: 2022-07-09 07:44 GMT



புதுடெல்லி,



நாட்டில் பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக இருப்பது குடிநீர். மனிதர்கள், விலங்கினங்கள் உள்ளிட்ட பல்வேறு உயிரினங்களுக்கும் குடிநீர் தேவையான ஒன்றாக உள்ளது. இவற்றில், தூய்மையான, சுகாதாரம் நிறைந்த குடிநீரே ஆரோக்கிய சமூகம் ஏற்பட வழிவகுக்கும்.

இந்நிலையில், நாடு முழுவதும் நாம் பயன்படுத்த கூடிய குடிநீரில் நானில்பினால் என்ற நச்சு தன்மை கொண்ட ரசாயனம் அதிக அளவில் கலந்து உள்ளது என ஆய்வு ஒன்று அதிர்ச்சி தகவலை வெளியிட்டு உள்ளது. இதன்படி, அனுமதிக்கப்பட்ட அளவை விட இந்த ரசாயன பொருள், குடிநீரில் 29 முதல் 81 மடங்கு அதிகம் காணப்படுகிறது.

இந்த ரசாயனம் நானில்பினால் ஈதாக்சிலேட் (என்.பி.இ.) என்ற ரசாயன சேர்மம் உற்பத்திக்கு பயன்படுகிறது. இந்த என்.பி.இ. பொருட்களானது துணி துவைக்க உபயோகிக்கும் டிடர்ஜென்டுகள் உள்ளிட்ட அன்றாட பயன்படும் பொருட்களில் சேர்க்கப்படுகிறது.




 

இந்த என்.பி.இ. எனப்படும் ரசாயன சேர்மம் நேரடியாக சுற்றுச்சூழலில் கலந்து, நானில்பினால்களாக உடைகிறது. பின்னர் அவை, நீர் மற்றும் மண் ஆகியவற்றில் எளிதில் கலக்கிறது. இந்த வகை ரசாயனம் தொழிற்சாலையில் தூய்மைப்படுத்தும் முறையின்போது வெளியிடப்படுகிறது. என்.பி.இ. உற்பத்தியின்போது கழிவுநீரிலும் வெளியிடப்படுகிறது.

இந்திய சந்தைகளில் விற்கப்பட்ட டிடர்ஜென்டுகளில் 11.92% அளவை விட அதிகளவில் இந்த நானில்பினால்கள் இருந்துள்ளன என 2019ம் ஆண்டு ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. இதுதவிர, அந்த ஆய்வில் இருந்து, அனைத்து ஆறு மற்றும் ஏரிகளிலும் அதிக அளவில் இந்த ரசாயனம் இருப்பது கண்டறியப்பட்டது என டாக்சிக் லிங்க் எனப்படும் ஆய்வின் இணை இயக்குனர் சதீஷ் சின்ஹா கூறியுள்ளார்.

இந்திய தரநிர்ணய வாரியம், குடிநீரில் பினால் ரசாயன சேர்மங்களின் அளவு பற்றி தரநிர்ணயம் செய்துள்ளது. எனினும், இந்தியாவில் குடிநீர் மற்றும் மேற்பரப்பு நீரில் நானில்பினால்கள் ரசாயனங்களுக்கான அளவு பற்றிய குறிப்பிட்ட எந்தவித நிர்ணயமும் இதுவரை இல்லை.

நீர்நிலைகள் உள்ளிட்ட சுற்றுச்சூழலில் இந்த ரசாயனம் கலக்காமல் தடை செய்யும் வகையில் டிடர்ஜெண்டுகள் உள்ளிட்ட நுகர்வோர் பொருட்களில் என்.பி.இ.க்களின் பயன்பாட்டுக்கு தடை விதிக்கவோ அல்லது அவற்றை முற்றிலும் நீக்கவோ நாட்டில் எந்தவித ஒழுங்குமுறை விதிகளும் இல்லை என்பது வருத்தத்திற்குரியது.

எனினும், சர்வதேச அளவில் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய ரசாயனம் என நானில்பினாலை ஐ.நா.வின் சுற்றுச்சூழல் திட்டமும் வரையறுத்து உள்ளது.


 



ஐரோப்பிய கூட்டமைப்பு மற்றும் அமெரிக்கா, ஜப்பான் மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளும் முன்பே இந்த ரசாயனம் பற்றிய ஆபத்துகளை ஒப்பு கொண்டுள்ளன. டிடர்ஜெண்டுகள் உள்ளிட்ட பல பொருட்களில் இந்த ரசாயன பொருட்களை நீக்குவதற்கான விதிமுறைகளையும் அவை அமல்படுத்த தொடங்கி விட்டன.

இந்தியாவில் மிக அதிக அளவாக பதிண்டாவில் ஆழ்துளை கிணற்றில் இருந்து எடுக்கப்பட்ட குழாய் நீரில் (80.5 பி.பி.பி. அளவு) உள்ளது. மிக குறைந்த அளவாக புதுடெல்லியில் இந்திரபிரஸ்தா நகரில் அரசு வழங்கும் குடிநீரில் (29.1 பி.பி.பி. அளவு) உள்ளது என்றும் தெரிய வந்துள்ளது.

குடிநீரில் காணப்பட கூடிய இந்த நானில்பினால் ரசாயன கலவையால் பொதுமக்களின் சுகாதாரத்திற்கு தீவிர பாதிப்பு ஏற்படும். இதுபற்றி முழு அளவில் ஆய்வு செய்து, அதற்கான தரநிர்ணயம் உருவாக்கப்பட வேண்டும்.

இதற்கான நீண்டகால செயல்பாட்டு முறையால், நாட்டு மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் கிடைக்க செய்வதுடன், தரமுள்ள குடிநீர் கிடைப்பதும் உறுதி செய்யப்படும் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால், அதுவரை நாட்டில் சுகாதாரம், பாதுகாப்பு நிறைந்த மற்றும் தரமுள்ள குடிநீர் என்பது கேள்வி குறியாகவே காணப்பட கூடும்.

Tags:    

மேலும் செய்திகள்