மறுசுழற்சி பொருட்களில் மலரும் மாடித்தோட்டம்
தனது வீட்டு மாடியில் அலங்கார மற்றும் பூச்செடிகளை வளர்ப்பதற்காக பால் பாக்கெட்டுகள், சிற்றுண்டி பெட்டிகள், சோப்பு கவர்கள் மற்றும் தெர்மாகோல் போன்ற மறுசுழற்சி பொருட்களை பயன்படுத்துகிறார், ஆனந்த்.;
ராஜஸ்தானின் பார்மர் பகுதியில் இருக்கும் இவரது வீட்டு மாடியில் 800 சதுர அடியில் இந்த மாடித்தோட்டம் அமைந்திருக்கிறது. அதிக வெப்பம் நிலவும் மாநிலமான ராஜஸ்தானில் தோட்டக்கலையை பொழுதுபோக்காக மேற்கொள்வதும், தோட்டத்தை பராமரிப்பதும் சவாலானது. அதனை ஏற்றுக்கொண்டவர், கொரோனா காலகட்டத்தில்தான் செடிகள் வளர்க்க தொடங்கி இருக்கிறார்.
"புதிய காற்றைச் சுவாசிப்பது, இயற்கை உணவுகளை உட்கொள்வது போன்றவற்றின் முக்கியத்துவத்தை கொரோனா காலத்தில்தான் உணர்ந்தேன். ஆரம்பத்தில் பொழுதுபோக்காக தொடங்கிய தோட்டப் பணி, இப்போது என்னுடைய பகுதிநேர வேலையாகவே மாறிவிட்டது" என்று பெருமிதம் கொள்கிறார்.
இன்று ஆனந்தின் மாடி தோட்டத்தில் 150 வகையான, ஆயிரத்துக்கும் அதிகமான செடிகள் உள்ளன. அவை அனைத்தும் பயன்படுத்தி தூக்கியெறியப்பட்ட பிளாஸ்டிக் கேன்கள், கொள்கலன்கள், பைகள் மற்றும் பெட்டிகளில் வளர்க்கப்படுகின்றன.
ஆனந்த் ஆயத்த ஆடை வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கிறார். இருப்பினும் சிறுவயதில் இருந்தே அவருக்கு தோட்டக்கலையில் ஆர்வம் இருந்து வந்தது. ஆனால், வேலை நிமித்தமாக அடிக்கடி இடமாறுதல் செய்ததால், தோட்டக்கலையில் ஈடுபடுவது சிரமமாக இருந்தது.
தற்போது ஆடை வியாபாரத்தில் தன்னை நிலை நிறுத்திக் கொண்டுவிட்டதால் வீட்டு மொட்டை மாடியின் 800 சதுர அடி பரப்பை தோட்டம் அமைப்பதற்காக பயன்படுத்தினார். ஆரம்பத்தில் தொழில்நுட்ப அறிவும், அனுபவமும் இல்லாததால், நர்சரியில் உள்ள மரக்கன்றுகள், செடிகளை வளர்த்து வந்தார். அவற்றை முறையாக பராமரிக்க தெரியாததால் அவை சில நாட்களிலேயே பட்டுப்போயின.
"ராஜஸ்தான் வெப்பத்தில் மாடியில் வளர்க்கும் செடிகளை பாதுகாப்பது எளிதானது அல்ல. பெரும்பாலான இடங்களில் சிமெண்டு தொட்டிகளில்தான் செடிகள் வளர்க்கப்படுகின்றன. அவை ஒன்றரை ஆண்டுகளுக்குக் கூட தாக்குப்பிடிப்பதில்லை. அதற்கு மாற்றாக குப்பையில் வீசப்படும் பொருட்களை மறு சுழற்சி அடிப்படையில் பயன்படுத்தி செடிகள் வளர்க்க முடிவு செய்தேன். ஆரம்பத்தில் ஒன்றிரண்டு பிளாஸ்டிக் பைகள், பெட்டிகளில் செடிகளை வளர்த்தேன். நன்றாக வளர்ந்தது. உடனே செடி வளர்ப்பை விரிவுபடுத்திவிட்டேன்'' என்று நினைவுகூர்கிறார் ஆனந்த்.
பழைய பொருட்களை மறுசுழற்சி செய்து செடிகள் வளர்க்கத் தொடங்கியபோது, அவரை குடும்பத்தினர் கேலி செய்தனர். ஆனால், தோட்டத்தில் செடிகள் சிமெண்டு தொட்டிகளை விட, அவற்றில் செழிப்பாக வளர்ந்தன. பால் பாக்கெட் கவர்கள், சிற்றுண்டி பாக்கெட்டுகளின் கவர்கள், சோப்பு பாக்கெட்டுகள் மற்றும் குளிர்பான பாட்டில்களில் செடிகளை வளர்க்கிறார். மெடிக்கல் ஸ்டோர்களில் இருந்து சேகரிக்கப்படும் தெர்மாகோல் கேன்களையும் செடிகள் வளர்க்கப் பயன்படுத்துகிறார்.
எப்போதும் ஆனந்த் தோட்டக்கலையில் புதிய முறைகளை பரிசோதிப்பதில் மும்முரம் காட்டுகிறார். ஆர்வமுள்ளவர்களுக்கு செடி வளர்ப்பு ஆலோசனைகளை வழங்கி வருகிறார். தனது தோட்டத்து செடிகளையும் வளர்க்க கொடுக்கிறார்.
பழைய பொருட்களை மறுசுழற்சி செய்து செடிகள் வளர்க்கத் தொடங்கியபோது, அவரை குடும்பத்தினர் கேலி செய்தனர். ஆனால், தோட்டத்தில் செடிகள் சிமெண்டு தொட்டிகளை விட, அவற்றில் செழிப்பாக வளர்ந்தன.