பழங்குடியின பைலட் கோபிகா
விமானப் பணிப்பெண் ஆக வேண்டும் என்ற 12 வருட கனவை நிஜமாக்கியிருக்கிறார், கேரளாவைச் சேர்ந்த பழங்குடியினப் பெண். கேரளாவில் விமானப் பணிப்பெண்ணாகும் முதல் பழங்குடியினத்தவர் என்ற பெருமையைப் பெற்றுள்ள 24 வயது கோபிகா, இதற்காக 12 ஆண்டுகள் காத்திருந்தார்.;
இது குறித்து அவர் கூறுகையில், "வீட்டின் மேலே விமானம் பறக்கும்போதெல்லாம் அதில் ஏறிச்செல்ல வேண்டும் என்று ஆசைப்பட்டது இன்றைக்கும் என் நினைவில் உள்ளது. விமானத்துக்கு அருகில் செல்லும்போது மெய்சிலிர்த்துப் போகிறேன்.
விமானப் பணிப்பெண்ணாகி வானத்தைத் தொட வேண்டும் என்ற கனவை என்னுள் வளர்த்துக் கொண்டேன். ஆனால், இதனை என் பெற்றோர் உட்பட யாரிடமும் சொல்லவில்லை. இதற்காக படிப்பதற்கு ஆகும் செலவைக் கேட்டபோது, என் கனவு கலைந்து போனதைப் போன்று உணர்ந்தேன். இவ்வளவு செலவு செய்ய என் குடும்பத்தினரால் முடியாது. அதன்பிறகு, பழங்குடியினருக்கு வயநாட்டில் விமானப் பயிற்சி நிறுவனம் இருப்பதை அறிந்தேன். அப்போது நான் கண்ணூர் கல்லூரியில் எம்.எஸ்.சி வேதியியல் படித்துக் கொண்டிருந்தேன்.
இந்தப் படிப்பை முடித்து விமானப் பணிப்பெண் பயிற்சியில் சேர்ந்தேன். எனக்கு அரசே ரூ.1 லட்சம் கட்டணம் செலுத்தியது. அரசு உதவியுடன் படித்தவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
அதன்பிறகு, ஏர் இந்தியா விமானத்தில் மும்பைக்குப் பயணித்து என் பயிற்சியை முடித்தேன். இன்னும் நிறைய சாதிக்க வேண்டும் என்ற கனவு இருக்கிறது. அதனைச் சாதிக்கும் வரை வெளியே சொல்ல மாட்டேன்" என்றார்.