நடிகர் ஜீவா இந்திய சினிமாவின் நாயகன் ஆனார்
1983-ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி உலககோப்பையை வென்று இந்தியாவின் சரித்திரத்தை மாற்றி அமைத்தது. வரலாற்றின் பொன் தருணமாக அனைவராலும் போற்றப்படும் இதன் பின்னணியில்தான் ‘83’ படம் எடுக்கப்பட்டிருக்கிறது.;
இந்தியாவெங்கும் பெரும் வரவேற்பை பெற்றுள்ள இப்படத்தில், நடிகர் ஜீவா கிரிக்கெட் வீரர் ஶ்ரீகாந்த் பாத்திரத்தில் அசத்தியிருந்தார். இதனால் இந்தியா முழுக்க கொண்டாடப்படுகிறார், ஜீவா. இதையடுத்து ‘பான் இந்தியா’ ஆர்ட்டிஸ்ட் ஆக மாறியிருக்கிறார் ஜீவா. அந்தப் படத்தில் நடித்தது பற்றிய அனுபவங்களை அவர் நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.
இந்தியா முழுவதும் ‘83’ படம் பெரிய வெற்றியை குவித்திருக்கிறது. நீங்கள் நடித்த ஶ்ரீகாந்த் பாத்திரம் பெரிதாக பேசப்படுகிறது. இந்த வரவேற்பை எப்படி உணர்கிறீர்கள்?
எல்லோருமே பாராட்டுறாங்க, ரொம்ப சந்தோஷமா இருக்கு. ஆனால் உண்மையில் நான் இந்தப் படத்தில் எதுவும் காமெடி பண்ணல. ஶ்ரீகாந்த் சார் அந்த சூழ்நிலையில என்ன ‘ரியாக்ட்’ பணணுவாரோ அதை மட்டும் தான் செய்தேன். நிஜ வாழ்க்கையில ஶ்ரீகாந்த் சாருக்கு நகைச் சுவை உணர்வு அதிகம். அது படத்தில் கரெக்டா ஒர்க் அவுட் ஆனது சந்தோசம். அது மக்களுக்கு பிடிச்சது இன்னும் ரொம்ப சந்தோசம்.
‘83’ பட வாய்ப்பு எப்படி கிடைத்தது?
நமது நடிகர்களுக்கிடையே சி.சி.எல். போட்டிகள் நடந்தபோது, நான் அதில் விளையாடினேன். இந்தப்படத்தின் தயாரிப்பாளர் விஷ்ணு இந்தூரி அந்த போட்டியை நடத்திய நிறுவனத்தின் உரிமையாளர்களில் ஒருவர். இந்தப்படம் எடுக்க திட்டமிட்டபோது, அவருக்கு என் ஞாபகம் வந்திருக்கிறது. சி.சி.எல். போட்டியின் போது நான் ஒரு கவர் டிரைவ் அடித்திருப்பேன். அது அப்படியே ஶ்ரீகாந்த் சார் விளையாடியது போலவே இருக்கும். அந்த ஷாட்டை பார்த்துதான் என்னை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.
1983-ல் நடந்த உலக கோப்பை போட்டியை பார்த்திருக்கிறீர்களா?
நான் சச்சின் காலத்து ரசிகன். அவர் கிரிக்கெட் விளையாடியதைதான் அதிகம் பார்த்திருக்கிறேன். உலக கோப்பை போட்டி பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். அந்தப் போட்டியின் சின்ன சின்ன கிளிப்ஸ், கொஞ்சம், கொஞ்சம் பார்த்திருக்கிறேன். முழுசாக பார்த்தது இல்லை. ஆனால் கபில்தேவை கிரிக்கெட் உலகின் ஹீரோவாக எல்லோருக்கும் தெரியும். அந்தப் போட்டியில் விளையாடிய மற்ற 11 பேரை பற்றி எல்லோருக்கும் தெரியாது.
1983-ல் வரலாற்று சாதனை நிகழ்த்தப்பட்டது. அது இன்றும் இந்தியர்கள் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. படத்தில் அதை உருவாக்கும் அனுபவம் எப்படி இருந்தது?
உண்மையிலேயே ரொம்ப பெரிய விஷயம். பிரிட்டிஷ் அரசு 1947-ம் ஆண்டு சுதந்திரம் தந்த பிறகு, மொத்த நாடும் ஒன்று சேர்ந்து கொண்டாடியது இந்த போட்டியோட வெற்றியைத்தான். அப்படி ஒரு வரலாற்றை படமாக எடுக்குறாங்க. அந்தப்படத்தில் நானும் ஒரு பங்காக இருந்திருக்கேன் அப்படிங்கிற உணர்வே சந்தோசமா இருக்கு. இது வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவம்.
ஶ்ரீகாந்த் பாத்திரத்தில் நடிக்கலாம் என எப்படி முடிவு செய்தீர்கள்?
முதன் முதல்ல இந்த வாய்ப்பு என்னை தேடி வந்தபோது, ஸ்ரீகாந்த் சார் உலக கோப்பையில எந்த மாதிரி ஆடியிருக்கார்ன்னு பார்த்தேன். அரை இறுதி, இறுதி போட்டி ரெண்டுலயும் ஸ்கோர் பன்ணிருக்காரு. அப்படினா கண்டிப்பாக கிளைமாக்ஸ்ல நம்மை பெரிசா காட்டுவாங்க. அதோடு இந்தியாவோட பெரிய டைரக்டர் கபீர்கான். அவரோட இயக்கத்துல நடிக்கலாம்ன்னு முடிவு செய்தேன். முதல் முறையா அவரை பார்த்தப்ப, படத்தை பற்றி சொல்ல ஆரம்பிச்சிட்டார். ஆனா அதெல்லாம் உண்மையா நடந்ததுன்னு தெரிய வந்தப்ப இதை கண்டிப்பா மிஸ் பண்ணிடக்கூடாதுனு தோணுச்சு. இந்த கேரக்டருக்காக பேச மும்பைக்கு கூப்பிட்டிருந்தாங்க. அங்கிருந்து திரும்பி வந்தபோது சிவராம் கிருஷ்ணன் சாரை விமான நிலையத்தில் பார்த்தேன். அவரிடம் 83 படத்தை பற்றி சொன்னேன். அவர் உடனே ஶ்ரீகாந்த் சாருக்கு போன் போட்டு, ஜீவா உன் ரோலில் நடிக்கிறான்னு சொல்லிட்டாரு. அவர்கிட்ட பேசினேன். அவர் நேரில் சந்திக்கலாம்ன்னு வீட்டுக்கு வரச்சொன்னாரு. அவரை நேரில் பார்த்த பிறகுதான் நடிப்பதற்கு முழு தைரியம் வந்தது.
1983 உலககோப்பை விளையாடிய வீரர்கள் பற்றி தெரியுமா? அவர்களை சந்தித்தீர்களா?
கபில் சார், கவாஸ்கர் சார், மொகிந்தர் சார் எல்லோரையும் படத்துக்காக சந்தித்து பேசினோம். அப்போது கபில் சார் நிறைய பேசினார். கவாஸ்கர் என்னோட விளையாட்டை பார்த்துட்டு.. இவரை எங்கிருந்து பிடிச்சீங்க.. அப்படியே ஶ்ரீகா (ஸ்ரீகாந்த்) மாதிரியே விளையாடுறான்னு சொன்னார். ரொம்ப சந்தோசமா இருந்தது.
நாயகன் ரன்வீர், தீபீகா படுகோனேவுடன் நடித்த அனுபவம்?
ரன்வீர் நடிப்பில் வெளியான கல்லிபாய் பார்த்து அவருடைய ரசிகர் ஆனேன். இந்தப்படத்துல அவர் முழுக்க முழுக்க கபில் தேவ்வா வாழ்ந்து இருந்தார். அவர் ஒரு மிகச்சிறந்த நடிகர். அவரோட வேலை பார்த்தது சூப்பரா இருந்தது. நிறைய பேசினோம். நிறைய சொல்லிக்கொடுத்தார். தீபிகா கூட காட்சிகள் ரொம்ப கம்மி தான். அந்த அனுபவமெல்லாம் சூப்பரா இருந்தது. தமிழ் படம் பத்தியெல்லாம் பேசினாங்க.
‘83’ பட அனுபவம் எப்படி இருந்தது?
அட்டகாசமான அனுபவம், ஒரு இண்டர்நேஷனல் படம் பண்ண மாதிரி இருந்தது. நீங்க பார்க்கும் போதே அதை உணர்ந்திருப்பீங்க. முழுப் படப்பிடிப்பும் லண்டன்ல தான் நடந்தது. எல்லா காட்சியிலும் அவ்வளவு கூட்டம் இருக்கும். ஆனாலும் துல்லியமா அந்த கூட்டத்த கண்ட்ரோல் பண்ணி பிரமாண்டமா எடுத்தாங்க. அந்த அனுபவமே ரொம்ப புதுசா இருந்தது. படப்பிடிப்பெல்லாம் லார்ட்ஸ் மைதானம், ஓவல் மைதானம் போய் எடுத்தோம். தெருவுல கிரிக்கெட் விளையாடிட்டு இருந்த பையனுக்கு லார்ட்ஸ் மைதானத்தை பார்க்கறதே கனவுதான். ஆனா நான் நேர்ல அங்க கிரிக்கெட் விளையாடினதெல்லாம் ஏதோ மாயாஜாலம் மாதிரி தான் இருந்தது. லார்ட்ஸ்ல விளையாடுனதுல என்னோட பிரண்ட்ஸ் எல்லோருக்கும் பொறாமை. எல்லோருமே அதைப்பத்தியே கேட்டுட்டு இருந்தாங்க. மொத்தமா இந்தப்படமே ரொம்பவும் புதுசா இருந்தது.