‘பைக்’ ராணி

கர்நாடகாவின் நந்தி மலையில் ஹார்லி டேவிட்சன் மோட்டார் பைக்கை ஓட்டிய முதல் பெண் என்ற பெருமையை கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்த ஸ்ரீஜா மேத்யூ பெற்றுள்ளார். அதுபற்றி அவர் பகிர்ந்து கொண்டதை பார்ப்போம்.;

Update: 2021-05-08 11:54 GMT
* உங்களுக்கு பைக் ஆர்வம் உண்டானது பற்றி கூறுங்கள்?

கேரளா பூர்வீகம் என்றாலும், அப்பா பெங்களூரு விமான படை அலுவலகத்தில் அதிகாரியாக பணியாற்றியவர். அங்கு அவரிடம் வித்தியாசமான பைக்குகள் இருந்தன. அவர் பைக்குகளை பராமரிப்பது, ஓட்டுவது போன்றவற்றை பார்த்துதான், எனக்கும் ஆர்வம் பிறந்தது.

* எப்போது பைக் ஓட்ட கற்றுக்கொண்டீர்கள்?

பள்ளிப்பருவத்திலேயே பைக் ஓட்டுவேன். அப்பாவின் ஜாவா, ராஜ்தூத் போன்ற வித்தியாசமான பைக்குகளை ஓட்ட பழகினேன். கியர் மாற்ற சிரமமாக இருக்கும் பைக்குகளில், அவரும் என்னுடன் பயணித்து, கியர் மாற்ற கற்றுக்கொடுப்பார்.

* பைக் ஓட்ட கற்றுக்கொண்டதில் கிடைத்த சுவாரசிய அனுபவத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்?

அப்பாவின் பழைய ராயல் என்பீல்ட் பைக்கை ஸ்டார்ட் செய்வது கொஞ்சம் சிரமமானது. ஆம்ப்ஸ் மீட்டரை பார்த்துதான் ஸ்டார்ட் செய்ய முடியும். பள்ளிப்பருவத்தின்போது, வீட்டிலிருந்து வண்டியை எப்படியோ மார்க்கெட்டிற்கு ஓட்டி சென்றுவிட்டேன். அங்கு வண்டியை மீண்டும் ஸ்டார்ட் செய்ய முயற்சிக்கும்போது, வண்டி ஸ்டார்ட் ஆகவில்லை. காரணம், ஆம்ப்ஸ் மீட்டரை எப்படி பயன்படுத்தி, எப்போது கிக்கரை மிதிக்கவேண்டும் என்பதில் பல குழப்பங்கள் இருந்தது. நிமிடங்கள் நகர்ந்து, ஒரு மணி நேரமானது. என்னுடைய அப்பா, பொடி நடையாக நடந்து மார்க்கெட்டிற்கு வந்துவிட்டார். அவருக்கு இந்த விஷயம் முன்கூட்டிய தெரிந்திருக்கிறது. வந்தவர், என்னை பார்த்து சிரித்தபடியே, வண்டியை ஸ்டார்ட் செய்து கொடுத்தார்.

* பைக் எக்ஸ்பெர்ட்டாக மாறியது எப்படி?

கல்லூரி காலத்தில், என்னுடைய உற்ற தோழிகளில் பைக்கும் ஒருவர். பைக் இல்லாமல், என்னுடைய கல்லூரி நாட்கள் கழிந்ததே இல்லை. அந்தளவிற்கு பைக் பிரியையாக மாறிவிட்டேன். பைக் ஓட்ட பழகியதுடன், பைக் பழுது நீக்கும் அம்சங்களையும் கற்றுக்கொண்டேன். அதனால் கல்லூரி வளாகத்திற்குள் பைக் ஓட்டினேன். சக மாணவ-மாணவிகளின் பைக்குகளுக்கு பழுது நீக்கி கொடுத்திருக்கிறேன்.

* பைக் பயணங்களில் ஆர்வம் ஏற்பட்டது எப்படி?

பைக் பிரியையாக மாறியதும், புதுமையான பைக்குகளை வாங்கி ஓட்ட ஆசைப்பட்டேன். குறிப்பாக சாலைகளில் வழக்கமாக ஓடும் பைக்குகள் இன்றி, யாரும் அதிகம் ஓட்டாத வண்டிகளை தேடிப் பிடித்து வாங்க ஆரம்பித்தேன். 2012-ம் ஆண்டே, ஹார்லி டேவிட்சன் பைக்கின் அயன் 883 மாடலை வாங்கி, ஓட்டினேன். இந்த மாடல் பைக்கை, இந்தியாவில் வாங்கிய முதல் பெண் நான்தான். அன்று முதல் ஹார்லி டேவிட்சன்தான் என்னுடைய உற்ற நண்பன். பெங்களூருவில் இருந்து, கன்னியாகுமரி, டெல்லி, லே, லடாக்... போன்ற பகுதிகளுக்கு பைக் பயணமாக சென்றிருக்கிறேன்.

* இப்போது என்னென்ன பைக்குகள் வைத்திருக்கிறீர்கள்?

யமஹாவின் பழைய மாடல்கள் தொடங்கி நவீன மாடல்கள் வரை வைத்திருக்கிறேன். ஜாவா, ராயல் என்பீல்ட், ராஜ்தூத் போன்ற மாடல்களும் இருக்கிறது. இதில் சிலவற்றை தந்தையின் மூலமாக பெற்றேன். சிலவற்றை சொந்தமாக வாங்கியிருக்கிறேன். ஹார்லி டேவிட் அயன் 883 மாடலை தொடர்ந்து, 1550 சி.சி. திறன் கொண்ட ஹார்லி டேவிட்சன் பேட் பாய் வண்டியை வாங்க ஆவலாய் இருக்கிறேன்.

* நிறைய இடங்களுக்கு பைக் பயணம் சென்றிருக்கிறீர்கள். அதில் தனித்துவமான பயணம் எது?

நான் பெங்களூருவாசி. இந்தியாவின் நிறைய நகரங்களுக்கு சென்று வந்திருக்கிறேன். ஆனால் பெங்களூருவில் இருந்து 2 மணிநேர பயண தொலைவில் இருக்கும் நந்தி மலைப்பகுதிக்கு, ஹார்லி டேவிட்சன் பைக்கில் சென்றுவர ஆசைப்பட்டேன். ஏனெனில் அது ரொம்பவும் தனித்துவமான மலை கிராமம். அந்த மலை கிராமத்திற்கு ஹார்லி டேவிட்சன் போன்ற உயர்ரக பைக்குகளில் யாரும் பயணித்ததில்லை. நான் பயணித்தபோது, மலைக்கிராம மக்கள் வியப்போடு பார்த்து ரசித்தனர். கரடு முரடான பாதை, சில இடங்களில் தார் சாலை... என அந்த பயணம் தனித்துவமானதாக அமைந்தது.

* எதிர்கால லட்சியம் என்ன?

பழைய காலத்து மோட்டார் சைக்கிள்களை வாங்கி வீட்டை அழகுபடுத்த ஆசைப்படுகிறேன். அதேபோல வேகமாக சீறிப்பாயும் நவீன பைக்குகளையும் வாங்கி, ஓட்ட ஆவலாய் இருக்கிறேன். ஆசைகள் கடல்போல இருந்தாலும் என்னுடைய ஹெச்.ஆர். பணியில் கிடைக்கும் வருமானத்தில்தான், அவைகளை நிறைவேற்ற முடியும் என்பதால், நிதானத்தை கடைப்பிடிக்கிறேன்.

மேலும் செய்திகள்