உலகை கவர்ந்த ‘ஊறுகாய் பெண்’
ஊறுகாய் தயாரித்து விற்பனை செய்து லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம் என்பதற்கு முன் மாதிரியாக விளங்குகிறார், சுமன் ஷூத் என்ற பெண்மணி.;
ஊறுகாய் தயாரித்து விற்பனை செய்து லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம் என்பதற்கு முன் மாதிரியாக விளங்குகிறார், சுமன் ஷூத் என்ற பெண்மணி. இவர் தயாரிக்கும் ஊறுகாய் ஜெர்மனியின் பெர்லினில் உள்ள ஒரு உணவகத்தில் வாடிக்கையாளர்கள் ரசித்து ருசிக்கும் கூட்டு வகைகளுள் ஒன்றாக மாறி இருக்கிறது. 62 வயதாகும் சுமன் டெல்லியை சேர்ந்தவர். அவரது பாட்டி ஊறுகாய் தயார் செய்யும்போது சுமன் உதவியாக இருந்திருக்கிறார். நாளடைவில் பாட்டியிடம் இருந்து ஊறுகாய் தயாரிக்கும் நுணுக்கங்களை கற்றுக்கொண்டவர் தனது கைப்பக்குவத்தில் புதுவிதமான ஊறுகாய் வகைகளை தயார் செய்து பார்த்திருக்கிறார். அவரது கைப்பக்குவம் ஊறுகாய்க்கு கூடுதல் சுவை சேர்த்திருக்கிறது.
குடும்பத்தினர் மட்டுமின்றி நண்பர்கள், அக்கம் பக்கத்தினர் சுமனிடம் தங்களுக்கு பிடித்தமான காய்கறிகளில் ஊறுகாய் தயார் செய்து தருமாறு கேட்டிருக்கிறார்கள். அவை வழக்கமான ஊறுகாய் ரகங்களில் இருந்து மாறுபட்டு விதவிதவிதமாக தயாராவதால் சுமனின் ஊறுகாய்க்கு மவுசு அதிகரித்திருக்கிறது. அவரது மகள்கள் இணையதளத்தில் தனது தாயாரின் புதுமையான ஊறுகாய் வகைகளை காட்சிப்படுத்தி இருக்கிறார்கள்.
அதன் ருசி ஜெர்மனி வரை பயணித்த கதையை சுமன் சொல்கிறார்:
‘‘குறிப்பிட்ட சில மாதங்களில் பிறப்பவர்கள் ஊறுகாயை ருசியாக தயாரிக்கும் திறனை கொண்டிருப்பார்கள் என்று எனது பாட்டி அடிக்கடி சொல்வார். அவர் குறிப்பிட்ட மாதங்களின் பட்டியலில் நான் பிறந்த ஆகஸ்டு மாதமும் இடம்பிடித்திருக்கிறது. அதனால் ‘நீயும் ருசியாக ஊறுகாய் தயாரிப்பாய்’ என்று கூறி அவர் ஊறுகாய் தயாரிக்கும்போதெல்லாம் என்னையும் உதவிக்கு அழைத்துக்கொள்வார். நான் ஊறுகாய்க்கு தேவையான மசாலா பொருட்களை சேகரித்து கொடுப்பேன். அதனால் நானும் ஊறுகாய் தயாரிக்க கற்றுக்கொண்டேன்.
நான் தயாரிக்கும் ஊறுகாய் ருசியாக இருப்பாக நிறைய பேர் சொல்லி இருக்கிறார்கள். அப்போதும் அதை நான் வியாபார கண்ணோட்டத்தொடு அணுகவில்லை. குடும்பத்தினர், நண்பர்களுக்கு தயார் செய்து கொடுப்பதே மன நிறைவாக இருந்தது. நாளடைவில் நிறைய பேர் என்னை தேடி வந்தார்கள். சிலர் ஆலிவ் எண்ணெய்யில் தயாரிக்கப்படும் ஊறுகாயை விரும்புவார்கள். சிலர் காரமாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். அதனால் விதவிதமாக ஊறுகாய் தயார் செய்வதற்கு பழகினேன். என் மகள்கள் ஸ்வேதா, சுனாட்சி இருவரும்தான் இணையதளம் வழியாக எனது தயாரிப்பை வெளி உலகுக்கு அறிமுகப்படுத்தினார்கள். இப்போது உலகின் பல பகுதிகளுக்கு என் ஊறுகாய் பயணிக்கிறது.
இணையதளத்தில் பார்த்து மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஜெர்மனியை சேர்ந்த ஒருவர் என் வீடு தேடி வந்தார். நான் தயாரித்த ஊறுகாய் வகைகளை வாங்கிச் சென்றவர் ருசித்து பார்த்துவிட்டு ‘ஜெர்மனியில் இந்திய உணவகம் ஒன்றை தொடங்க இருக்கிறேன். தொடங்கியதும் உங்களிடம் நிறைய வாங்குவேன்’ என்று கூறி சென்றார்.
அவர் சமீபத்தில் என்னை தொடர்பு கொண்டு, உணவகத்தை ஆரம்பித்துவிட்டதாக கூறி ஊறுகாய் வகைகளை நிறைய வாங்கி சென்றார். நான் சீசன் காலங்களில் மாதத்திற்கு 1000 கிலோ வரை ஊறுகாய் தயாரிக்கிறேன். காலி பிளவர், கேரட், வெங்காயம் உள்பட 60 வகையான காய்கறிகளை பயன்படுத்தி ஊறுகாய் தயாரிக்க எனக்கு தெரியும். இன்னும் புதிதாக ஊறுகாய் வகைகளை பரிசோதித்து பார்ப்பதற்கு ஆர்வமாக இருக்கிறேன். வீட்டில் யாரையும் நம்பி இருக்காமல் சொந்தமாக வருமானம் ஈட்டுவது மகிழ்ச்சி அளிக்கிறது’’ என்கிறார்.
சுமனிடம் ஊறுகாய் வாங்கும் வாடிக்கையாளர்களில் ஒருவரான மந்தீப், ‘‘அமெரிக்காவில் இருக்கும் எனது உறவினர் களுக்கு, சுமன் தயாரித்த பலவகையான ஊறுகாய் வகைகளை வாங்கி பரிசாக அனுப்பி இருக்கிறேன். காலிபிளவர், கேரட் ஊறுகாய் எங்களுக்கு ரொம்ப பிடிக்கும். எனது கணவர் மூன்றே நாட்களில் அரை கிலோ ஊறுகாய் சாப்பிட்டுவிட்டார்’’ என்கிறார்.