மும்பை- புனே நெடுஞ்சாலையில் லாரி மீது கார் மோதி 5 பேர் பலி

மும்பை- புனே நெடுஞ்சாலையில் முன்னால் சென்ற லாரி மீது கார் மோதிய விபத்தில் 5 பேர் பலியாகினர். மேலும் பெண் உள்பட 4 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Update: 2022-11-18 18:45 GMT

மும்பை, 

மும்பை- புனே நெடுஞ்சாலையில் முன்னால் சென்ற லாரி மீது கார் மோதிய விபத்தில் 5 பேர் பலியாகினர். மேலும் பெண் உள்பட 4 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

லாரி மீது பயங்கர மோதல்

மராட்டிய மாநிலம் புனே அருகே சிஞ்ச்வாட் பகுதியை சேர்ந்தவர் மச்சிந்திரநாத். இவர் தனக்கு சொந்தமான காரில் பெண் உள்பட 8 பேருடன் பயணம் செய்தார்.

புனே-மும்பை எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில் கப்போலி அருகே தேகு கிராமம் அருகே நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணியளவில் கார் வந்தது. அப்போது முன்னால் சென்ற காரை முந்த முயன்ற போது இவர்களது கார் கட்டுப்பாட்டை இழந்தது. இதில் திடீரென முன்னால் சென்ற லாரி மீது பின்பக்கமாக பயங்கரமாக மோதி விபத்து ஏற்பட்டது.

5 பேர்பலி

இந்த விபத்தில் காரின் முன்பகுதி அப்பளம் போல நொறுங்கியது. மேலும் காரில் இருந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும் 5 பேர் படுகாயமடைந்தனர். தகவல் அறிந்த கப்போலி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

படுகாயமடைந்த 5 பேரை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர்களில் ஒருவர் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது. பலியானவர்கள் வாசிம் காஜி, அனில் சனப், அப்துல்கான், ராகுல் பாண்டே, அஷ்தோஷ் காரேக்கர் என்பது தெரியவந்தது.

படுகாயம் அடைந்த மச்சிந்திரநாத், அமீர் ஹசேன், பர்வாலால் கைர்ரேலால் மற்றும் பெண் ஆகிய 4 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதிவேகம் காரணம்

அதிக வேகம் காரணமாக கட்டுப்பாட்டை இழந்த கார் விபத்தில் சிக்கியது தெரியவந்தது.

இதனால் போலீசார் காரை ஓட்டியவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே கார் மோதியதும் லாரி நிற்காமல் சென்று விட்டது. எனவே அந்த லாரி டிரைவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்