வயதான தம்பதியிடம் ரூ.4.35 கோடி மோசடி; கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு

வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் இருந்து பேசுவதாக கூறி வயதான தம்பதியிடம் ரூ.4.35 கோடி நூதன மோசடியில் ஈடுபட்ட கும்பலை போலீசார் தேடிவருகின்றனர்.

Update: 2023-10-26 18:45 GMT

மும்பை, 

வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் இருந்து பேசுவதாக கூறி வயதான தம்பதியிடம் ரூ.4.35 கோடி நூதன மோசடியில் ஈடுபட்ட கும்பலை போலீசார் தேடிவருகின்றனர்.

ரூ.11 கோடி வைப்பு நிதி

மும்பை கப்பரடே, நேவிநகர் பகுதியை சோ்ந்தவர் பிரோஸ் (வயது71). இவரது மனைவி ஹிர்ஜிகாகா. பிரோஸ் என்ஜினீயரிங் சேவை நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். கடந்த மே மாதம் சந்தியா பரத்வாஜ் என்ற பெண், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (இ.பி.எப்..) அலுவலகத்தில் இருந்து பேசுவதாக பிரோசின் மனைவி ஹிர்ஜிகாகாவிடம் போனில் கூறினார்.

அந்த பெண், உங்களது கணவரின் வருங்கால வைப்பு நிதி கணக்கில் போடப்பட்ட ரூ.4 லட்சத்தை எடுக்கவில்லை. தற்போது அந்த பணம் ரூ.11 கோடியாக முதிர்ச்சி அடைந்து உள்ளது. அந்த பணத்தை எடுக்க உதவி செய்வதாக கூறினார். போனில் பேசிய பெண் பிரோசின் பான் கார்டு எண் உள்ளிட்ட விவரங்களை கூறினார். இதனால் போனில் பேசுபவர் உண்மையில் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தை சேர்ந்தவர் என ஹிர்ஜிகாகா நம்பினார்.

ரூ.4.35 கோடி மோசடி

அதன்பிறகு பிரோஸ், சந்தியா பரத்வாஜ் கொடுத்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது பேசியவர்கள் 30 சதவீதம் வரி செலுத்தினால் மட்டுமே ரூ.11 கோடியை பெற முடியும் என்றார். இதை நம்பி பிரோஸ் அவர் கூறிய வங்கி கணக்கிற்கு ரூ.4.35 கோடி வரை செலுத்தினார். ஆனால் அவர் கூறியது போல ரூ.11 கோடி பணம் பெரோசின் வங்கி கணக்கிற்கு வரவில்லை. இதனால் தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பெரோசின் மனைவி மோசடி குறித்து கப்பரடே போலீசில் புகார் அளித்தாா்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து வயதான தம்பதியிடம் ரூ.4.35 கோடி நூதன மோசடியில் ஈடுபட்ட கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்