லாத்தூரில் அடுக்குமாடி கட்டிடத்தில் பயங்கர தீ- 3 பேர் மூச்சுத்திணறி பலி

லாத்தூரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 பெண்கள் உள்பட 3 பேர் மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்தனர். 4 பேர் காயம் அடைந்தனர்.

Update: 2023-10-26 18:45 GMT

மும்பை, 

லாத்தூரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 பெண்கள் உள்பட 3 பேர் மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்தனர். 4 பேர் காயம் அடைந்தனர்.

கரும்புகை பரவியது

லாத்தூர் நகரில் உள்ள சத்ரபதி சிவாஜி மகாராஜ் சவுக் அருகே 4 மாடி கொண்ட சிவாய் என்ற கட்டிடத்தின் தரைதளத்தில் உள்ள பூக்கடையில் நேற்று காலை மின்கசிவு காரணமாக திடீரென தீவிபத்து ஏற்பட்டது. வேகமாக பரவிய தீ கட்டிடத்தின் மேல் தளங்களுக்கு பரவியது. மேலும் கரும்புகை வெளியேறியது.

இதை அறிந்து அதிர்ச்சி அடைந்த 3-வது மாடியில் வசிக்கும் 80 வயது பெண் உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் படிவழியாக கீழே இறங்கி தப்பிக்க முயற்சி செய்தனர். ஆனால் அவர்களின் முயற்சி பலன் அளிக்கவில்லை. முதல் மாடிக்கு வந்தபோது கரும்புகையில் சிக்கிய அவர்கள் மூச்சுத்திணறல் காரணமாக பரிதாபமாக உயிரிழந்தனர்.

4 பேருக்கு காயம்

இதேபோல 2-வது மாடியில் வசிக்கும் 4 பேர் உயிரை காப்பாற்றிக்கொள்ள கட்டிடத்தின் பால்கனியில் இருந்து புடவைகளை கட்டி தொங்கவிட்டு அதன் உதவியுடன் கீழே குதித்தனர். இதில் அவர்கள் காயத்துடன் உயிர் தப்பினர். அவர்கள் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இதற்கிடையே சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர் தீயை போராடி அணைத்தனர். மேலும் பிணமாக கிடந்த 3 பேரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் உயிரிழந்தவர்கள் பெயர் குசும் லோண்டே(வயது 80), சுனில் லோண்டே(58), பிரமிளா லோண்டே(50) என தெரியவந்தது.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்