திருமணத்திற்கு பின் கொடுமை... கணவர் பாகிஸ்தானி என தெரிந்ததும் இளம்பெண் எடுத்த அதிரடி முடிவு

காஷ்மீரில் திருமணத்திற்கு பின் பாகிஸ்தான் அல்லது துபாய்க்கு வர கணவர் கட்டாயப்படுத்தி, கொடுமை செய்த நிலையில் இளம்பெண் அதிர்ச்சிகர முடிவை எடுத்து உள்ளார்.

Update: 2023-01-18 08:01 GMT

போபால்,


ஜம்மு மற்றும் காஷ்மீரின் உதாம்பூர் பகுதியை சேர்ந்த இளம்பெண் பிரியங்கா கோல்கோல்த்ரா. 2022-ம் ஆண்டு டிசம்பர் 2-ல் ரோஷன் என்பவரை பிரியங்கா திருமணம் செய்துள்ளார். அதன்பின்பு, மனைவியை ரோஷன் அடித்து துன்புறுத்தி வந்துள்ளார் என மனைவி தரப்பில் குற்றச்சாட்டு கூறப்படுகிறது.

திருமணத்திற்கு பின் கணவரின் பேஸ்புக் முகப்பு பக்கத்தில் சென்று பார்த்த பிரியங்கா, அதில் பாகிஸ்தான் தேசிய கொடியுடன் ரோஷன் இருக்கும் புகைப்படங்களை கண்டுள்ளார்.

இதன்பின், பிரியங்காவை பாகிஸ்தான் அல்லது துபாய்க்கு சென்று வாழலாம் என ரோஷன் கட்டாயப்படுத்தி உள்ளார். அதற்கு பிரியங்கா மறுத்துள்ளார். குடும்ப வன்முறையையும் பிரியங்கா எதிர்கொண்டுள்ளார்.

கணவர் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர் என்பது தனக்கு தெரியாமல் மறைத்து, கட்டாயப்படுத்தி அவருடன் திருமணம் செய்து வைத்து விட்டனர் என பிரியங்கா வருந்தியுள்ளார்.

இந்த நிலையில், பிரியங்கா அதிரடி முடிவு ஒன்றை எடுத்து உள்ளார். திடீரென அவரை காணவில்லை. இதனால் பதற்றம் அடைந்த அவரது உறவினர்கள் பல இடங்களில் தேடினர். பின்பு, உதாம்பூர் போலீசில் புகார் அளித்தனர்.

இதுபற்றி காஷ்மீர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். கூடுதல் துணை ஆணையாளர் ராஜேஷ் சிங் பதாரியா செய்தியாளர்களிடம் கூறும்போது, காஷ்மீர் போலீசார் விசாரணை நடத்தி போபாலுக்கு சென்றுள்ளனர்.

அதில், பெண் ஒருவர் ஆணுடன் வசித்து வருகிறார் என தெரிய வந்தது. அந்த நபர் மன்ஜீத் என்பதும் உதாம்பூரை சேர்ந்த அவருடன் பிரியங்கா ஒன்றாக வசித்து வருவதும் விசாரணையில் தெரிய வந்தது. மன்ஜீத் போபாலில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

போபால் கோர்ட்டில் கணவரிடம் இருந்து விவாகரத்து கோரி பிரியங்கா வழக்கு தொடர்ந்து உள்ளார். அவருடன் வாழவோ அல்லது நாட்டை விட்டு வெளியேறி வசிக்கவோ விருப்பம் இல்லை என பிரியங்கா, தனது கணவர், குடும்பத்தினர் முன்னிலையில் நடந்த கவுன்சிலிங்கின்போது தெளிவாக கூறி விட்டார்.

இதுபோன்ற சூழலில், அந்த பெண் யாருடன் வாழ வேண்டும் என சுய முடிவை எடுக்க முடியும். பாகிஸ்தானிய நபருடன் வாழ அவருக்கு விருப்பம் இல்லை. வேறு பகுதியில் வாழ்ந்து வருகிறார். அந்த பெண்ணுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என காவல் துறை உயரதிகாரி ராஜேஷ் சிங் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்