ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட என்னென்ன நிபந்தனைகள்?

ஜனாதிபதி பதவிக்காலம் 5 ஆண்டுகள் ஆகும்.

Update: 2022-06-10 02:53 GMT

புதுடெல்லி,

ஜனாதிபதி தேர்தல் முதல்முறையாக 1952-ம் ஆண்டு நடந்தது. இப்போது நடப்பது 16-வது ஜனாதிபதி தேர்தல் ஆகும். முதல் 5 ஜனாதிபதி தேர்தல்களில், வெற்றிக்கு சிறிதும் வாய்ப்பு இல்லாதவர்களும் போட்டியிட்டனர். எனவே, ஜனாதிபதி பதவிக்கு நிற்பவரின் வேட்புமனுவை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் முன்மொழியும் நிபந்தனை கொண்டுவரப்பட்டது.

10 எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் முன்மொழிய வேண்டும், 10 எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வழிமொழிய வேண்டும் என்ற விதிமுறை வந்தது. கடந்த 1997-ம் ஆண்டு, 50 பேர் முன்மொழிய வேண்டும், 50 பேர் வழிமொழிய வேண்டும் என்று எண்ணிக்கை உயர்த்தப்பட்டது.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட டெபாசிட் தொகை ரூ.2 ஆயிரத்து 500 ஆக இருந்தது. 1997-ம் ஆண்டு, அத்தொகை ரூ.15 ஆயிரமாக உயர்த்தப்பட்டது.ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும். 35 வயது பூர்த்தி ஆகி இருக்க வேண்டும். மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியை பெற்றிருக்க வேண்டும். ஜனாதிபதி பதவிக்காலம் 5 ஆண்டுகள் ஆகும்.

மத்திய அரசிலோ, மாநில அரசுகளிலோ அல்லது உள்ளாட்சி அமைப்புகளிலோ ஆதாயம் தரும் பதவிகளை வகிப்பவர்கள், ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட தகுதியற்றவர்கள் ஆவர்.இருப்பினும், ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, மாநில கவர்னர், மத்திய, மாநில மந்திரிகள் ஆகிய பதவிகளை வகிப்பவர்கள், ஆதாயம் தரும் பதவி வகிப்பதாக கருதப்படமாட்டார்கள்.

ஒரு வேட்பாளர், பதிவான ஓட்டுகளில் 6-ல் ஒரு பங்குக்கு குறைவான ஓட்டுகளை பெற்றால், அவரது டெபாசிட் பறிபோய் விடும். அதற்கு மேல் ஓட்டு வாங்கினால், டெபாசிட் திரும்ப தரப்படும்.ஒரு வேட்பாளரோ அல்லது அவர் சார்பிலோ 4 வேட்புமனுக்களுக்கு மேல் தாக்கல் செய்யக்கூடாது.

எந்த எம்.பி., எம்.எல்.ஏ.வும் ஒரு வேட்பாளரின் வேட்புமனுவில் மட்டுமே முன்மொழிபவராகவோ, வழிமொழிபவராகவோ கையெழுத்திட வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட வேட்புமனுவில் கையெழுத்திட்டால், இரண்டாவதாக தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுவில் உள்ள கையெழுத்து செல்லாததாக கருதப்படும்.

ஜனாதிபதி தேர்தல் முடிவை எதிர்த்து, முடிவுகள் வெளியான 30 நாட்களுக்குள் சுப்ரீம் கோர்ட்டில் வேட்பாளர் தேர்தல் வழக்கு தொடரலாம். அல்லது, 20 எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கூட்டாக சேர்ந்து வழக்கு தொடரலாம்.

ஜனாதிபதி தேர்தலில், நாடாளுமன்ற மக்களவை எம்.பி.க்கள் 543 பேர், மாநிலங்களவை எம்.பி.க்கள் 233 பேர், மாநிலங்களின் எம்.எல்.ஏ.க்கள் 4 ஆயிரத்து 33 பேர் என மொத்தம் 4 ஆயிரத்து 809 பேர் ஓட்டுப்போட தகுதி பெற்றவர்கள்.

காலியாக உள்ள 3 மக்களவை, 16 மாநிலங்களவை இடங்களுக்கு தேர்தல் நடக்க உள்ளதால், அதன்பிறகு இறுதி வாக்காளர் எண்ணிக்கை அறிவிக்கப்படும்.நியமன எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், சட்டமேலவை உறுப்பினர்கள் ஓட்டுப்போட தகுதி இல்லை.

ஒரு எம்.பி. ஓட்டின் மதிப்பானது, மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது.

ஆனால், தற்போது காஷ்மீரில் சட்டசபை இல்லாததால், ஒரு எம்.பி. ஓட்டின் மதிப்பு 708-ல் இருந்து 700 ஆக குறைந்துள்ளது. எம்.எல்.ஏ.க்கள் ஓட்டு மதிப்பு, மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடும்.

இத்தேர்தல், ஓட்டுச்சீட்டு அடிப்படையில் நடைபெறும். ஓட்டுச்சீட்டில் ஓட்டை குறிக்க விசேஷ பேனாவை தேர்தல் கமிஷன் வழங்கும். ஓட்டுச்சீட்டை கையில் கொடுத்தவுடன், அந்த பேனாவை தேர்தல் அதிகாரி கொடுப்பார்.

அந்த பேனாவை தவிர, வேறு பேனாவால் ஓட்டை குறிக்கக்கூடாது. அப்படி குறித்தால், அது செல்லாத ஓட்டாக நிராகரிக்கப்படும்.

ஜனாதிபதி தேர்தலில் பேனர்கள், சுவரொட்டிகள் போன்றவற்றுக்கு இடமில்லை. ஓட்டுப்பதிவின்போது, சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களை பயன்படுத்துமாறும், பிளாஸ்டிக்கை தவிர்க்குமாறும் தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்