மணிப்பூர் கவர்னருடன் முதல் மந்திரி பிரேன் சிங் சந்திப்பு- பதவி விலகக் கூடாது என ஆதரவாளர்கள் போராட்டம்

கலவரத்திற்கு பொறுப்பேற்று முதல் மந்திரி பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில், பிரேன் சிங் ஆதரவாளர்கள் பதவி விலகக் கூடாது போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Update: 2023-06-30 10:13 GMT

இம்பால்,

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் முதல்-மந்திரி பிரேன் சிங் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடக்கிறது. அந்த மாநிலம், தற்போது கலவர பூமியாக மாறி உள்ளது. அங்கு பெரும்பான்மை சமூகமாக உள்ள மெய்தி இனத்தினர், தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து சலுகைகள் வழங்க வேண்டும் என்று ஓங்கிக் குரல் கொடுக்கின்றனர். இதை அங்கு பழங்குடி இனத்தவராக உள்ள நாகா, குகி இன மக்கள் தீவிரமாக எதிர்க்கின்றனர். இதனால் அவர்களிடையே கடந்த மே மாதம் 3-ந் தேதி முதல் மோதல் நிலவி வருகிறது.

மாநிலம் முழுவதும் பரவிய கலவரங்களில் சுமார் 120 பேர் பலியாகி உள்ளனர். 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள், முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு அமைதியற்ற சூழல் நிலவுகிறது.

மணிப்பூரின் தற்போதைய நிலைமைக்கு முதல்-மந்திரி பிரேன் சிங்தான் காரணம் என அவர்கள் கூறி உள்ளனர். மேலும் இந்த நெருக்கடிக்கு அவர்தான் பொறுப்ற்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர். இதற்கிடையே மணிப்பூரில் இயல்புநிலையை மீட்டெடுக்க பிரதமர் மோடி ஒரு ஆலோசனை கூட்டம் நடத்தினார். மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா அனைத்து கட்சி கூட்டம் ஒன்றை நடத்தி விவாதித்தார்.

இந்த நிலையில், மணிப்பூர் மாநில முதல்-மந்திரி பிரேன் சிங் இன்று ராஜினாமா செய்யவுள்ளதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், மணிப்பூர் கவர்னரை பிரேன் சிங் இன்று மாலை சந்தித்தார். இதனால், மணிப்பூர் அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கலவரத்திற்கு பொறுப்பேற்று முதல் மந்திரி பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில், பிரேன் சிங் ஆதரவாளர்கள் பதவி விலகக் கூடாது போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்