சிறுத்தைகள் நடமாட்டத்தால் கிராம மக்கள் பீதி; வனத்துறையினர் தீவிர நடவடிக்கை

மால்தாரேவில் சிறுத்தைகள் நடமாட்டத்தால் கிராம மக்கள் பீதி அடைந்துள்ளனர். மேலும் வனத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்துவருகின்றனர்.

Update: 2022-09-25 07:45 GMT

குடகு;


குடகு மாவட்டம் விராஜ்பேட்டை தாலுகா துபாரே வனப்பகுதியையொட்டி மால்தாரே, மைலாபுரா, உண்டி, பாடகே பானங்காலா, பெட்டதள்ளி, மார்க்கொல்லா, கல்லள்ளி கிராமங்கள் அமைந்துள்ளது. இதனால் வனப்பகுதியில் இருந்து வரும் யானை, சிறுத்தை, புலி போன்ற விலங்குகள் கிராமங்களில் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது.

இந்நிலையில் மால்தாரே பகுதியில் கடந்த சில நாட்களாக சிறுத்தைகள் நடமாடி வருவதாக சிலர் கூறிவந்தனர். இதனை அந்த பகுதி மக்கள் நம்பவில்லை. இந்த நிலையில் சிறுத்தையின் கால் தடம் அந்த பகுதியில் பதிந்திருந்தது. இதை பார்த்த பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

மேலும் நேற்று மால்தாரேவை அடுத்த தட்டள்ளி உள்ள ஆசிரம பள்ளி அருகே 2 சிறுத்தைகள் நடமாடியுள்ளது. இதை பார்த்த கூலி தொழிலாளிகள் உடனே வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வருவதற்குள் சிறுத்தை அங்கிருந்து தப்பி சென்றுவிட்டது.

இதையடுத்து அந்த சிறுத்தைகளை பிடிக்க வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் கோரிக்கை வைத்தனர். அந்த கோரிக்கையை ஏற்ற வனத்துறையினர் சிறுத்தையை பிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும் சிறுத்தைகள் நடமாட்டத்தால் பொதுமக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்