கேரளா: லாரி ஏறி 5 பேர் பலி எதிரொலி - கடும் நடவடிக்கைக்கு மந்திரி உறுதி
கேரளாவில், குடித்து விட்டு வாகனம் ஓட்டுபவர்களுக்கு எதிராக, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மந்திரி கூறியுள்ளார்.;
திருவனந்தபுரம்,
கேரளாவில் திருச்சூர் மாவட்டத்தில் நத்திகா பகுதியில், சாலையோரம் படுத்திருந்த 2 குழந்தைகள் உள்பட 5 பேர் மீது லாரி ஒன்று இன்று ஏறிய சம்பவத்தில் அவர்கள் அனைவரும் உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் அவர்கள் தவிர, 7 பேர் காயமடைந்தனர். அவர்களில் 3 பேரின் நிலைமை கவலைக்குரிய வகையில் உள்ளது. அவர்களுக்கு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கேரள போக்குவரத்து துறை மந்திரி கே.பி. கணேஷ் குமார் செய்தியாளர்களிடம் இன்று கூறும்போது, லாரியின் ஓட்டுநர் குடிபோதையில் இருந்துள்ளார். அவருடைய ஓட்டுநர் உரிமம் மற்றும் லாரிக்கான அனுமதி ஆகியவற்றை ரத்து செய்ய அரசு முடிவு செய்துள்ளது என்றார்.
இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்குவது பற்றி மாநில அமைச்சரவை முடிவு செய்யும். குடித்து விட்டு வாகனம் ஓட்டுபவர்கள் மற்றும் பிற போக்குவரத்து விதிமீறல்கள் ஆகியவற்றுக்கு எதிராக, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். கேரளாவில், போக்குவரத்து ஆணையாளர்களின் கீழ் இரவில் ரோந்து பணி தீவிரப்படுத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த விபத்தில் உயிரிழந்த அனைவரும் நாடோடிகள் ஆவர் என போலீசார் தெரிவித்து உள்ளனர்.