ஜேம்ஸ் பாண்ட் பட பாணியில் திருடனை துரத்தி, பிடித்த மணமகன்; வைரலான வீடியோ
டெல்லி-டேராடூன் நெடுஞ்சாலையில், விரைவாக சென்று கொண்டிருந்த அந்த வேனின் மீது மணமகன் தொற்றி ஏறினார்.;
மீரட்,
உத்தர பிரதேசத்தின் மீரட் மாவட்டத்தில் துங்கர்வாலி கிராமத்தில், தேவ் குமார் என்பவருக்கு திருமணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில், திருமணத்திற்கு முந்தின நிகழ்ச்சி ஒன்றில் மணமகன் தேவ் கலந்து கொண்டார். திருமண உடையில் அலங்கரிக்கப்பட்டு இருந்த மணமகன் கோவிலுக்கு செல்ல தயாரானார்.
அப்போது, தேவுக்கு அணிவிப்பதற்காக பணமாலை ஒன்று வைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், தேவின் உறவினரிடம் இருந்த அந்த பணமாலையை நபர் ஒருவர் திடீரென பறித்து கொண்டு மினி வேனில் தப்பி சென்றிருக்கிறார். இதனை பார்த்ததும் ஆத்திரமடைந்த மணமகன் தேவ், உடனடியாக அந்த வழியே சென்ற பைக்கில் ஏறி சென்று, திருடனை துரத்தியுள்ளார்.
டெல்லி-டேராடூன் நெடுஞ்சாலையில், விரைவாக சென்று கொண்டிருந்த அந்த வேனின் மீது மணமகன் தொற்றி ஏறினார். பின்னர், வேனின் ஜன்னல் பகுதி வழியே உள்ளே நுழைந்திருக்கிறார். வேனை நிறுத்தும்படி ஓட்டுநரிடம் கூறி, அதனை நிற்க செய்துள்ளார்.
இதன் பின்பு, உள்ளூர்வாசிகளின் உதவியுடன் பணமாலையையும் திரும்ப பெற்றார். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட அந்நபரை மணமகன் தேவ் உள்பட சுற்றியிருந்தவர்கள் அடித்தும், உதைத்தும் கடுமையாக தாக்கினர். திருடனை, ஜேம்ஸ் பாண்ட் பட பாணியில் மணமகன் துரத்திப்பிடித்து, தாக்கும் காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்றும் வைரலாகி வருகிறது.