நினைவிடத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்: பிரணாப் முகர்ஜியின் மகள் பிரதமர் மோடிக்கு நன்றி

முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு நினைவிடம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது.;

Update:2025-01-07 20:26 IST

புதுடெல்லி,

இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, கடந்த 2020 ஆகஸ்ட் 31-ந்தேதி காலமானார். இந்நிலையில் பிரணாப் முகர்ஜிக்கு நினைவிடம் அமைக்க மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கி உள்ளது.

இதன்படி, டெல்லியில் உள்ள ராஜ்காட்டின் ஒரு பகுதியான ராஷ்டிரிய ஸ்மிருதி வளாகத்தில் பிரணாப் முகர்ஜிக்கான நினைவிடம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக பிரணாப் முகர்ஜியின் மகள் ஷர்மிஸ்தா முகர்ஜி இன்று பிரதமர் மோடியை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார். இது தொடர்பாக 'எக்ஸ்' தளத்தில் ஷர்மிஸ்தா முகர்ஜி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-

"எனது தந்தைக்கு நினைவிடம் அமைக்க ஒப்புதல் வழங்கிய மத்திய அரசின் முடிவுக்காக பிரதமர் மோடியை சந்தித்து நன்றி தெரிவித்தேன். நாங்கள் கேட்காத போதும் இதற்கான அனுமதி கிடைத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. பிரதமரின் எதிர்பாராத இந்த கருணை நெகிழ்ச்சி அடைய வைக்கிறது.

அரசு மரியாதையை நாம் கேட்கக்கூடாது, அதை அரசே வழங்க வேண்டும் என்று தந்தை அடிக்கடி கூறுவார். அவரது நினைவை போற்றும் வகையில், பிரதமர் மோடி செய்துள்ள மரியாதைக்கு எனது நன்றியை தெரிவிக்கிறேன்.

எனது அப்பா தற்போது இருக்கும் இடத்தில் கைத்தட்டலோ அல்லது விமர்சனமோ அவரை பாதிக்காது. அதே சமயம், அவரது மகளாக எனது மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தைகள் போதாது."

இவ்வாறு ஷர்மிஸ்தா முகர்ஜி கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்