'100 கோடி வாக்காளர்கள் என்ற புதிய சாதனையை இந்தியா படைக்க உள்ளது' - தலைமை தேர்தல் ஆணையர்
100 கோடி வாக்காளர்கள் என்ற புதிய சாதனையை இந்தியா படைக்க உள்ளது என தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.;
புதுடெல்லி,
டெல்லி சட்டமன்ற தேர்தல் வரும் பிப்ரவரி 5-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலும் பிப்ரவரி 5-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
"உலகளவில் 2024 ஒரு தேர்தல் ஆண்டாகும். கடந்த ஆண்டு ஜனநாயக நாடுகளில் நடைபெற்ற தேர்தல்களில், உலக மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் வாக்களித்துள்ளனர்.
இந்தியாவில் 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் தேர்தல்கள் நடந்தன. மக்களவை தேர்தலில் வாக்குப்பதிவு சதவீதம், மக்கள் பங்கேற்பு, பெண்கள் பங்கேற்பு ஆகியவற்றில் புதிய சாதனைகள் படைக்கப்பட்டன.
இந்தியா தற்போது 99 கோடி வாக்காளர்களை கடந்துள்ளது. விரைவில் 100 வாக்காளர்களை கொண்ட நாடாக நாம் மாறப்போகிறோம். பெண் வாக்காளர்களின் எண்ணிக்கையும் சுமார் 48 கோடியாக இருக்கும். இதன் மூலம் தேர்தல் வாக்குப்பதிவில் மற்றொரு புதிய சாதனையை இந்தியா படைக்கும்."
இவ்வாறு ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.