இந்திய பாதுகாப்புக்கு சவாலாக உள்ள பயங்கரவாத அமைப்புகளுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும்: பிரதமர் மோடி
டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழுக்கான வசதியின் வழியே 1.5 கோடி மூத்த குடிமக்கள் பலனடைந்து உள்ளனர் என பிரதமர் மோடி பேசியுள்ளார்.;
புதுடெல்லி,
டெல்லியில் சுப்ரீம் கோர்ட்டில் அரசியல் சாசன தின கொண்டாட்ட நிகழ்ச்சி இன்று நடந்தது. இதில், பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசும்போது, இந்திய அரசியல் சாசனத்தின் 75-வது ஆண்டு கொண்டாடப்படுகிறது. இது, நாட்டின் ஆழ்ந்த பெருமைக்குரிய ஒரு விசயம்.
அரசியல் சாசனம் மற்றும் அரசியல் சாசன சபையின் உறுப்பினர்கள் அனைவருக்கும் நான் தலைவணங்குகிறேன் என கூறிய அவர், மும்பை பயங்கரவாத தாக்குதல் நடந்த தினம் இன்று என்பதனையும் நாம் மறந்து விட முடியாது. அதில், உயிரிழந்தவர்களுக்கு நான் என்னுடைய அஞ்சலியை தெரிவித்து கொள்கிறேன் என பேசியுள்ளார்.
இந்திய பாதுகாப்புக்கு சவாலாக உள்ள ஒவ்வொரு பயங்கரவாத அமைப்புக்கும் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்ற நாட்டின் உறுதிப்பாட்டையும் நான் மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன் என்று பிரதமர் மோடி பேசியுள்ளார்.
ஒரு காலத்தில், ஓய்வூதியம் பெறும் மூத்த குடிமக்கள், அவர்கள் உயிருடன் இருக்கின்றனர் என நிரூபிப்பதற்காக, வங்கிகளுக்கு செல்வது வழக்கம். ஆனால் இன்றோ, வீட்டில் இருந்தபடியே டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழுக்கான வசதியை அவர்கள் பெற்றுள்ளனர். இந்த வசதியின் வழியே 1.5 கோடி மூத்த குடிமக்கள் பலனடைந்து உள்ளனர் என்று பேசியுள்ளார். 'முதலில் நாடு' என்ற மனவுறுதியுடன் மக்கள் வாழ வேண்டும் என்றும் அவர் பேசியுள்ளார்.
அரசியல் சாசனத்தின் உறுதியுடன் மக்கள் நலனிற்கான நடவடிக்கைகளை தன்னுடைய அரசு எடுத்து வருகிறது. நாட்டின் நிகழ் காலம் மற்றும் எதிர்காலத்திற்கான ஒரு வழிகாட்டியாக, மாறாமல் பாயும் நீரோடையாக, துடிப்பான ஒன்றாக அரசியல் சாசனம் உள்ளது என்றும் அவர் பேசியுள்ளார்.