பாலத்தில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண்... நொடிப்பொழுதில் காப்பாற்றிய டிரைவர் - பரபரப்பு வீடியோ

கார் டிரைவரின் துரித முயற்சியால் தற்கொலைக்கு முயன்ற பெண் நூலிழையில் உயிர் தப்பினார்.;

Update:2024-08-17 09:29 IST

மும்பை,

மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் அடல் சேது எனும் பாலம் உள்ளது. கடல் மீது அமைக்கப்பட்டுள்ள இந்த பாலத்தின் விளிம்பில் நின்றுகொண்டு பெண் ஒருவர் குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாலத்தின் பாதுகாப்பு தடுப்பு மீது அந்த பெண் அமர்ந்திருந்தார். அப்போது அந்த பெண்ணின் அருகே, வாடகை கார் ஓட்டுநர் டிரைவர் நின்றுகொண்டிருக்கிறார். அவர், தற்கொலைக்கு முயற்சி செய்யும் பெண்ணிடம் ஏதோ பேசுகிறார். அதற்குள் அந்த பெண் பாலத்தில் இருந்து குதித்து விடுகிறார்.

இதை சற்றும் எதிர்பாராத கார் டிரைவர், பாதுகாப்பு தடுப்புக்கு உள்புறமாக நின்றுகொண்டிருந்தவாறே பெண்ணின் தலை முடியை கெட்டியாக பிடித்துக் கொண்டார். அதற்கு அங்கு வந்த ரோந்து போலீசார், கார் டிரைவருடன் இணைந்து, பெண்ணை போராடி மீட்டனர். கார் டிரைவரின் துரித முயற்சியால் நூலிழையில் அந்த பெண் உயிர் தப்பினார்.

போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், தற்கொலைக்கு முயன்ற பெண் ரீமா முகேஷ் படேல் என்பதும், அவர் மும்பையின் வடகிழக்கில் உள்ள புறநகரான முலுண்டில் வசிப்பவர் என்பதும் தெரியவந்துள்ளது. அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, தற்கொலைக்கு முயன்ற பெண்ணை கார் டிரைவர் மற்றும் போலீசார் இணைந்து மீட்ட சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

Tags:    

மேலும் செய்திகள்