கர்நாடக சட்டசபை சபாநாயகர் பதவிக்கு யு.டி.காதர் மனு தாக்கல்; ஒரு மனதாக இன்று தேர்வாகிறார்
கர்நாடக சட்டசபையின் சபாநாயகர் பதவிக்கு யு.டி.காதர் மனு தாக்கல் செய்துள்ளார். அவர் இன்று (புதன்கிழமை) ஒரு மனதாக சபாநாயகராக தேர்வாக உள்ளார்.
பெங்களூரு:
புதிய சபாநாயகர் தேர்வு
கர்நாடகத்தில் முதல்-மந்திரி சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்துள்ளது. 15-வது சட்டசபை இன்று (புதன்கிழமை) நிறைவு பெறுகிறது. இதையடுத்து, கடந்த 22-ந் தேதி புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்புக்காக 3 நாட்கள் சிறப்பு கூட்டம் பெங்களூரு விதானசவுதாவில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, நேற்று முன்தினம் காங்கிரஸ் ஆட்சி அமைந்த பின்பு கர்நாடக சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் தொடங்கியது.
இதில், தற்காலிக சபாநாயகராக மூத்த எம்.எல்.ஏ.வான ஆர்.வி.தேஷ்பாண்டே தேர்வு செய்யப்பட்டு இருந்தார். அதன்படி அவர், புதிய எம்.எல்.ஏ.க்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிலையில், சிறப்பு கூட்டத்தின் கடைசி நாளான இன்று புதிய சபாநாயகர் தேர்வு செய்யப்படுவார் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
தலைவர்கள் பேச்சுவார்த்தை
இதையடுத்து, சபாநாயகராக யாரை நியமிப்பது என்று காங்கிரஸ் தலைவர்கள் தீவிரமாக ஆலோசித்து வந்தனர். தற்காலிக சபாநாயகர் ஆர்.வி.தேஷ்பாண்டே, மூத்த தலைவர் எச்.கே.பட்டீல், டி.பி.ஜெயச்சந்திரா, என்.ஒய்.கோபாலகிருஷ்ணா உள்ளிட்டவர்களிடம் சபாநாயகர் பதவியை ஏற்றுக் கொள்ளும்படி முதல்-மந்திரி சித்தராமையா உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் கூறினார்கள். ஆனால் மந்திரி பதவியை எதிர்பார்த்து காத்திருப்பதாக கூறி ஆர்.வி.தேஷ்பாண்டே, எச்.கே.பட்டீல், என்.ஒய்.கோபாலகிருஷ்ணா கூறி விட்டனர்.
அதேநேரத்தில் தன்னை சபாநாயகராக நியமித்து விடுவார்கள் என்று பயந்து டி.பி.ஜெயச்சந்திரா கடந்த 2 நாட்களாக தனது செல்போனை சுவிட்ச்-ஆப் செய்து வைத்துள்ளார். அவர் எங்கு இருக்கிறார்? என்பதும் தெரியாமல் இருந்தது. இதையடுத்து, மங்களூரு தொகுதி எம்.எல்.ஏ.வான யு.டி.காதருடன் நேற்று முன்தினம் நள்ளிரவு வரை சித்தராமையா, ரன்தீப்சிங் சுர்ஜேவாலா உள்ளிட்ட தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
யு.டி.காதர் மனு தாக்கல்
முதலில் சபாநாயகர் பதவியை ஏற்க அவர் மறுத்ததுடன், மந்திரி பதவி வழங்கும்படி தெரிவித்துள்ளார். பின்னர் முதல் 2 ஆண்டுகள் மட்டும் சபாநாயகராக இருக்கும்படியும், அதன்பிறகு, மந்திரி பதவி வழங்குவதாகவும் சமாதான பேச்சுவார்த்தை நடந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, சபாநாயகர் பதவியை ஏற்க தயார் என்று யு.டி.காதர் தெரிவித்துள்ளார். இதனால் முதல்-மந்திரி சித்தராமையா மகிழ்ச்சி அடைந்ததாக சொல்லப்படுகிறது.
இதையடுத்து, பெங்களூரு விதானசவுதாவில் நேற்று சபாநாயகர் பதவிக்கான தேர்தலுக்காக யு.டி.காதர் மனு தாக்கல் செய்தார். சட்டசபை செயலர் விசாலாட்சியிடம் முதல்-மந்திரி சித்தராமையா, துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார், யு.டி.காதர் சேர்ந்து அந்த மனுவை வழங்கி இருந்தார்கள். இதன் காரணமாக சபாநாயகர் பதவி யாருக்கு வழங்குவது என்ற பிரச்சினைக்கு காங்கிரஸ் முடிவு கண்டுள்ளது.
ஒரு மனதாக தேர்வு
கர்நாடக சட்டசபையில் இன்று சபாநாயகர் தேர்தல் நடக்க உள்ளது. யு.டி.காதர் மட்டுமே இந்த தேர்தலில் போட்டியிடுவதால், அவர் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டு சபாநாயகராக அறிவிக்கப்பட உள்ளார். மங்களூரு தொகுதியில் 4 முறை போட்டியிட்டு யு.டி.காதர் எம்.எல்.ஏ. ஆக வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு தற்போது 53 வயதாகிறது. கடந்த 2013-ம் ஆண்டு சித்தராமையா ஆட்சியில் சுகாதாரத்துறை மந்திரியாகவும், அதன்பிறகு, உணவுத்துறை மந்திரியாகவும் யு.டி.காதர் இருந்தார்.
காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சியின் கூட்டணி ஆட்சியில் கூட நகர வளர்ச்சித்துறை மந்திரியாக அவர் இருந்தார். கூட்டணி ஆட்சி கவிழ்ந்த பின்பு சட்டசபை எதிர்க்கட்சி துணை தலைவராக யு.டி.காதர் இருந்து வந்தார். தற்போது அவர் 16-வது சட்டசபையின் புதிய சபாநாயகராக பதவி ஏற்க உள்ளார். கர்நாடகத்தில் முஸ்லிம் ஒருவர் முதல் முறையாக சபாநாயகராவது குறிப்பிடத்தக்கது.