இந்து மத கடவுள் சிவ லிங்கம் மீது கை கழுவிய பாஜக மந்திரி

இந்து மத கடவுள் சிவ லிங்கம் மீது பாஜக மந்திரி கை கழுவிய சம்பவம் தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Update: 2023-09-04 21:12 GMT

லக்னோ,

உத்தரபிரதேச மாநில பாஜக மந்திரி சதீஷ் சர்மா. இவர் நேற்று ராம்பூரியில் உள்ள இந்து மத வழிபாட்டு தலமான சிவன் கோவில் சென்றார்.

அங்கு உள்ள சிவ லிங்கத்தை அவர் வழிபட்டார். அப்போது, சிவ லிங்கம் மீது பாஜக மந்திரி கை கழுவிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சதீஷ் சர்மா சிவ லிங்கத்திற்கு பூஜை செய்துள்ளார். பின்னர், கையில் சந்தனம் இருந்ததால் கையை சுத்தப்படுத்த சிவ லிங்கம் மீது கை கழுவியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலான நிலையில், சனாதன தர்மத்தை மதிக்காதவர்கள் தான் இதுபோன்ற செயலில் ஈடுபடுவார்கள். மதத்திற்கு எதிரான செயலில் ஈடுபட்ட சதீஷ் சர்மாவை மந்திரி பதவியில் இருந்து முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் நீக்க வேண்டுமென காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

முன்னதாக, சனாதன தர்மம் குறித்து திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய கருத்து வட இந்தியாவில் பேசுபொருளான நிலையில் தற்போது பாஜக மந்திரி சதீஷ்சர்மா கடவுள் சிவலிங்கம் மீது கை கழுவும் வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



Tags:    

மேலும் செய்திகள்