பால் தாக்கரே சம்பாதித்த சின்னத்தை சில நிமிடங்களில் இழந்து விட்டார் உத்தவ் தாக்கரே - ஏக்நாத் காட்சே கிண்டல்

பால் தாக்கரே சிரமப்பட்டு சம்பாதித்த சின்னத்தை உத்தவ் தாக்கரே இழந்து விட்டதாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் ஏக்நாத் காட்சே தெரிவித்துள்ளார்.

Update: 2022-10-10 01:19 GMT

மும்பை,

மராட்டியத்தில் கடந்த ஜூன் மாதம் நடந்த அரசியல் சூறாவளியால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. சிவசேனா மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே, கட்சி தலைமைக்கு எதிராக அதிருப்தி அணியை உருவாக்கினார். சிவசேனாவின் மொத்தம் உள்ள 55 எம்.எல்.ஏ.க்களில் 40 பேருடன் பா.ஜனதாவுடன் கூட்டணி வைத்து முதல்-மந்திரி ஆனார் ஏக்நாத் ஷிண்டே.

இதையடுத்து ஏக்நாத் ஷிண்டே தரப்பு சிவசேனாவை உரிமை கோரி தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் ஒன்றை அளித்தது. ஆனால் எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கு விசாரணை முடியும் வரை, வில் அம்பு சின்னம் தொடர்பான ஏக்நாத் ஷிண்டே தரப்பின் கடிதத்தை தேர்தல் ஆணையம் பரிசீலிக்க தடை விதிக்க வேண்டும் என்று உத்தவ் தாக்கரே தரப்பினர் சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டனர்.

இது தொடர்பான மனுக்களை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு உத்தவ் தாக்கரே தரப்பினரின் மனுவை தள்ளுபடி செய்து சிவசேனா கட்சி சின்னத்தை உரிமை கோரி ஏக்நாத் ஷிண்டே தாக்கல் செய்த கடிதத்தை பரிசீலித்து முடிவு எடுக்க எந்த தடையும் இல்லை என்று தேர்தல் ஆணையத்துக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதன்படி தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தியது.

இந்த மனுவை விசாரித்த தேர்தல் ஆணையம் வெளியிட்ட உத்தரவில், அந்தேரி கிழக்கு தொகுதி இடைதேர்தலில் உத்தவ் தாக்கரே தலைமையிலான அணியும், முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணியும் கட்சியின் பெயரையோ அல்லது வில்- அம்பு சின்னத்தையோ பயன்படுத்த தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

இந்த நிலையில், பால் தாக்கரே சம்பாதித்த சின்னத்தை உத்தவ் தாக்கரே இழந்து விட்டதாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் ஏக்நாத் காட்சே தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில்,"அப்பா(பால் தாக்கரே) கஷ்டப்பட்டு சம்பாதித்ததை, மகன்(உத்தவ் தாக்கரே) அரசியல் சண்டையில் சில நிமிடங்களில் இழந்து விடுகிறார். பால் தாக்கரேவின் அயராத உழைப்பால் வில் மற்றும் அம்பு சின்னம் பிரபலமானது.

அவர் (உத்தவ் தாக்கரே) சின்னத்துடன் ஆட்சிக்கு வந்தார், ஆனால் இரு தரப்பு சண்டையில் இப்போது எல்லாம் தொலைந்து விட்டது, இதன் விளைவாக தேர்தல் சின்னம் முடக்கப்பட்டுள்ளது. இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது" இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்