வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த தாய், தங்கையை கொலை செய்த சிறுவன்: டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சியால் ஏற்பட்ட தாக்கமா?

திரிபுராவில் 15 வயது சிறுவன் ஒருவன், தனது குடும்பத்தைச் கோடாரியால் வெட்டிக் கொன்ற குற்றத்திற்காக கைது செய்யப்பட்டான்.

Update: 2022-11-06 13:00 GMT

அகர்தலா,

வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் 15 வயது சிறுவன் ஒருவன், தனது குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரை கோடாரியால் வெட்டிக் கொன்ற குற்றத்திற்காக ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டான்.

திரிபுராவின் தலாய் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வந்த ஒரு சிறுவன், நேற்று(சனிக்கிழமை) இரவு தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த அவனது தாத்தா, தாய், இளைய சகோதரி மற்றும் அத்தை ஆகியோரை ஈவு இரக்கமின்றி கோடாரியால் வெட்டி படுகொலை செய்தான்.

பஸ் கண்டக்டர் ஆக பணிபுரியும் சிறுவனின் தந்தை காலையில் வீட்டிற்குள் வந்தபோது, அங்கு இரத்தம் சிதறியிருப்பதையும், நால்வரின் உடல்களும் வீட்டின் அருகே உள்ள செப்டிக் டேங்கில் வீசப்பட்டதையும் கண்டார். உடனடியாக போலீசுக்கு தகவல் கொடுத்தார்.

அவனை தீவிரமாக தேடிவந்த போலீசார், அருகிலுள்ள சந்தையில் இருந்து ஞாயிற்றுக்கிழமை காலை கைது செய்தனர். குற்றத்திற்கான காரணம் குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர் என்று திரிபுரா காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த சிறுவன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் குற்ற விசாரணை சம்பவங்கள் நிகழ்ச்சிகளை அடிக்கடி பார்த்து வந்ததாக அக்கம்பக்கத்தினர் கூறினர்.அவன் கம்பியூட்டர் கேம் விளையாடுவதில் அதிக ஆர்வமுடையவனாக இருந்துள்ளான் என்பதும் விசாரணையில் தெரிவவந்துள்ளது.

மேலும், கொலை செய்யும் போது, அவர்களின் அலறல் வெளியே கேட்காமல் இருக்க, அந்த சிறுவன் தொலைக்காட்சியில் அதிக ஒலியில் இசையை ஒலிபரப்பியதால் அக்கம்பக்கத்தினர் இந்த சம்பவம் குறித்து அறிந்திருக்க வாய்ப்பில்லாமல் போய்விட்டது என்று போலிசார் தெரிவித்தனர்.

இதற்கு முன்பு அந்த சிறுவன் தனது சொந்த வீட்டில் பணத்தை திருடிய சம்பவமும் நடந்தது. உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, விசாரணை தொடங்கப்பட்டுள்ளது என்று போலிசார் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்