குளத்தின் அருகே நின்று செல்பி எடுக்க முயன்ற வாலிபருக்கு நேர்ந்த சோகம்
குளத்தின் படிக்கட்டில் தாஹிர் இறங்கியபோது எதிர்பாராத விதமாக கால் தவறி குளத்தில் விழுந்தார்.
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் சிவமொக்கா மாவட்டம் சிகாரிப்புரா தாலுகா உடுதடி கிராமத்தில் அக்கம்மாதேவி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் அருகே குளமும் அமைந்திருக்கிறது. இந்த நிலையில், அக்கம்மாதேவி கோவிலுக்கு சிராளகொப்பா டவுன் பகுதியைச் சேர்ந்த தாஹிர் என்பவர் தனது நண்பர்களுடன் சுற்றுலா வந்தார்.
பின்னர் அவர் கோவில் அருகே உள்ள குளத்திற்கு சென்று அங்கு நின்று தனது செல்போனில் 'செல்பி' புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார். குளத்தின் படிக்கட்டில் தாஹிர் இறங்கியபோது அவர் எதிர்பாராத விதமாக கால் தவறி குளத்தில் விழுந்து தண்ணீரில் மூழ்கினார்.
இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் குளத்தில் மூழ்கிய தாஹிரை தேடினர். சிறிது நேர போராட்டத்திற்கு பின் தாஹிர் சடலமாக மீட்கப்பட்டார். பின்னர் அவரது உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து சிராளகொப்பா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.