நாட்டில் காங்கிரசை விட நேர்மையற்ற கட்சி வேறு எதுவும் கிடையாது: பிரதமர் மோடி பேச்சு

காங்கிரஸ் அரசால் 10 ஆண்டுகளுக்கு முன் அரியானா கொள்ளையடிக்கப்பட்டது. விவசாயிகளின் நிலங்கள் கொள்ளையடிக்கப்பட்டன என பிரதமர் மோடி பேசியுள்ளார்.

Update: 2024-09-25 10:09 GMT

சோனிபத்,

அரியானாவில் அக்டோபர் 5-ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு பா.ஜ.க., காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் பிரசார பணிகளில் ஈடுபட தொடங்கியுள்ளன.

சட்டசபை தேர்தலை முன்னிட்டு ஆம் ஆத்மி கட்சியின் ரானியா தொகுதிக்கான வேட்பாளராக ஹர்பீந்தர் சிங் அறிவிக்கப்பட்டார். அவருக்கு ஆதரவாக டெல்லி முன்னாள் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று பிரசாரத்தில் ஈடுபட்டார். இதற்காக வாகன பேரணியும் நடத்தப்பட்டது.

இந்த சூழலில், அரியானாவின் சோனிபத் நகரில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் பிரதமர் மோடி இன்று கலந்து கொண்டு பேசினார். அவர் பேசும்போது, எந்த இடத்திலெல்லாம் காங்கிரஸ் அதிகாரத்திற்கு வருகிறதோ, அந்த இடத்தில் ஊழல் நடக்கிறது.

இந்திய அரசு நடைமுறையில், ஊழலை தோன்ற செய்து, அதனை வளர்த்தெடுத்த கட்சி என்றால் அது காங்கிரஸ் கட்சிதான். இந்தியாவில் ஊழலின் அன்னையாக காங்கிரஸ் விளங்குகிறது. தலைமை ஊழல் செய்யும்போது, பின்னர் ஒவ்வொருவரும் ஊழல் செய்வதற்கான உரிமம் பெற்று கொள்ளையடிக்கின்றனர்.

10 ஆண்டுகளுக்கு முன் காங்கிரஸ் அரசால் அரியானா கொள்ளையடிக்கப்பட்டது. விவசாயிகளின் நிலங்கள் கொள்ளையடிக்கப்பட்டன. இந்த ஊழல் நிறைந்த காங்கிரஸ் அரசை அதிகாரத்தில் இருந்து பல மைல்கள் தொலைவுக்கு தள்ளி வைக்க வேண்டும். கர்நாடகாவில் காங்கிரசின் நிலையை பாருங்கள்.

கர்நாடக முதல்-மந்திரி நில முறைகேட்டில் குற்றவாளியாக இருக்கிறார். அவரை விசாரணை செய்வதற்கான உத்தரவுகள் சரியானவை என கர்நாடக ஐகோர்ட்டு நேற்று கூறியுள்ளது. அதுபற்றி விசாரணை நடத்தப்பட வேண்டும். தலித்துகளுக்கான நிதியிலும் காங்கிரஸ் கட்சி ஊழல் செய்துள்ளது. ஒட்டு மொத்த அளவில் நாட்டில் காங்கிரசை விட நேர்மையற்ற கட்சி என்று வேறு எதுவும் கிடையாது என அவர் பேசியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்