காஷ்மீரின் ஆப்பிள் அமெரிக்கா, ஜப்பானுக்கு சென்றடைய வேண்டும் என்றால்... ராகுல் காந்தி பரபரப்பு பேச்சு
ஜம்மு-காஷ்மீரில் தேர்தலுக்கு முன் மாநில அந்தஸ்து மீட்டெடுக்கப்பட வேண்டும் என நாங்கள் விரும்பினோம் என்று ராகுல் காந்தி இன்று பேசியுள்ளார்.
பாராமுல்லா,
ஜம்மு-காஷ்மீரில் மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. அதன்படி, 24 தொகுதிகளுக்கு கடந்த 18-ந்தேதி முதல்கட்ட தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தலில் 61 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தன. இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரில் 2-ம் கட்ட தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. ஜம்முவில் 11 தொகுதிகள், காஷ்மீரில் 15 தொகுதிகள் என மொத்தம் 26 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரின் பாராமுல்லா மாவட்டத்தில் சோப்பூரில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் காங்கிரஸ் எம்.பி. மற்றும் மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி இன்று கலந்து கொண்டு பேசினார்.
அவர் பேசும்போது, ஜம்மு-காஷ்மீரில் தேர்தலுக்கு முன் மாநில அந்தஸ்து மீட்டெடுக்கப்பட வேண்டும் என நாங்கள் விரும்பினோம். மாநில அந்தஸ்து மீட்டெடுக்கப்பட்ட பின்னரே தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று அனைத்து மக்களும் விரும்பினார்கள். அது நடக்கவில்லை. முதல் நடவடிக்கையாக தேர்தல் நடந்துள்ளது என்றார்.
ஆனால், இதற்கு பின்னர் ஜம்மு-காஷ்மீரின் மாநில அந்தஸ்து மீட்டெடுக்கப்பட வேண்டும். நாடாளுமன்றத்தில், இதுபற்றி பிரதமர் மோடிக்கு இந்தியா கூட்டணி அழுத்தம் கொடுக்கும்.
அவர்கள் இதனை செய்யவில்லை என்றால், மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சியமைத்ததும், உங்களுடைய மாநில அந்தஸ்து எங்களால் மீட்டெடுக்கப்படும். ஜம்மு-காஷ்மீரின் ஆப்பிள் அமெரிக்கா மற்றும் ஜப்பானுக்கு சென்றடைய வேண்டும் என்றால், மாநில அந்தஸ்து மீட்டெடுக்கப்பட வேண்டும் என்று அவர் பேசியுள்ளார்.