ஜம்மு-காஷ்மீர் 2ம் கட்ட தேர்தல்: வாக்குப்பதிவு நிறைவு
ஜம்மு-காஷ்மீரில் இன்று 2ம் கட்ட தேர்தல் பலத்த பாதுகாப்புடன் நடைபெற்றது.
ஸ்ரீநகர்,
ஜம்மு மற்றும் காஷ்மீர் சட்டசபை தேர்தலில் இரவு 7 மணி நிலவரப்படி 54.11 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.
ஜம்மு காஷ்மீரில் ஒருபோதும் பா.ஜ.க. ஆட்சி அமையாது எனவும், மதச்சார்பற்ற அரசுதான் அமையும் என்றும் பி.டி.பி. கட்சி தலைவர் மெகபூபா முப்தி கூறி உள்ளார். ஜம்மு காஷ்மீரில் எந்த அரசு அமைந்தாலும் பி.டி.பி. முக்கிய கட்சியாக இருக்கும் என்றும், பி.டி.பி.யின் ஆதரவு இல்லாமல் மதச்சார்பற்ற அரசு அமைக்க முடியாது என்றும் அவர் கூறி உள்ளார்.
5 மணி நிலவரப்படி, அதிகபட்சமாக ஜம்மு பகுதியில் உள்ள ஸ்ரீ மாதா வைஷ்ணவி தேவி தொகுதியில் 75.29 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. அதைத் தொடர்ந்து பூஞ்ச்-ஹவேலி (72.71 சதவீதம்), குல்பகர் (72.19 சதவீதம்) மற்றும் சூரன்கோட் (72.18 சதவீதம்) ஆகிய தொகுதிகள் உள்ளன.
காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள தொகுதிகளைப் பொருத்தவரை அதிகபட்சமாக கான்சாஹிப் தொகுதியில் 67.70 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. கங்கன் (எஸ்.டி.) தொகுதியில் 67.60 சதவீதமும், சரார்-இ-ஷரீப் தொகுதியில் 66 சதவீதமும் வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணைய தரவுகள் தெரிவிக்கின்றன. மிக குறைந்த அளவாக ஹப்பகடல் தொகுதியில் 15.80 சதவீத வாக்குகளே பதிவாகியுள்ளன.
ஜம்மு காஷ்மீரில் இன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்துள்ளது. மாலை 5 மணி நிலவரப்படி 54 சதவீத வாக்குகள் பதிவாகியிருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
ஜம்மு மற்றும் காஷ்மீரில் தேர்தலுக்கு முன் மாநில அந்தஸ்து மீட்டெடுக்கப்பட வேண்டும் என நாங்கள் விரும்பினோம் என்று ராகுல் காந்தி பேசியுள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் திருப்புமுனையான தேர்தல் நடைபெறுவதாகவும், ஜம்மு காஷ்மீர் அதன் எதிர்காலத்திற்காக தேர்ந்தெடுக்கப்படுவதாகவும் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீனேட் தெரிவித்தார்.
“ஜம்மு காஷ்மீரில் கடந்த 10 ஆண்டுகளாக முற்றிலும் தவறான நிர்வாகமும், வேலையின்மையும் உள்ளது. மாநிலத்தின் வளங்கள் வெளிநபர்களுக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டன. வாக்குப்பதிவு நடக்கும் விதத்தை பார்க்கையில், மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள் என நினைக்கிறேன்” என்றும் சுப்ரியா குறிப்பிட்டார்.
பிற்பகல் 3 மணி நிலவரப்படி 46 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. அதிகபட்சமாக ரீசி தொகுதியில் 63.9 சதவீத வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. ஸ்ரீநகரில் மிக குறைந்த அளவாக 22.6 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.
தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
ஜம்மு காஷ்மீரில் இன்று வாக்குப்பதிவு முழுமையாக சி.சி.டி.வி. கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுகின்றன. இளைஞர்கள், பெண்கள் மற்றும் மூத்த குடிமக்கள் பொறுமையாக வரிசையில் நிற்பதையும், தங்கள் உரிமையைப் பயன்படுத்த காத்திருப்பதையும் பார்க்க முடிகிறது.
இது ஜனநாயக திருவிழா. கடந்த காலங்களில் தேர்தலுக்கு இடையூறு செய்த பகுதிகள், தேர்தல் புறக்கணிப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்ட பகுதிகளில் இப்போது வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இதன்மூலம் ஜம்மு காஷ்மீரில் வரலாறு உருவாகி வருகிறது. வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களிப்பது பாராட்டுக்குரியது. இதன் தாக்கம் நீண்ட காலத்திற்கு இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஜம்மு காஷ்மீரில் இன்று இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறும் நிலையில், தேர்தல் நடைமுறைகள் மற்றும் வாக்குச்சாவடிகளை வெளிநாட்டு குழுவினர் பார்வையிட்டனர். இக்குழுவில் பல்வேறு நாடுகளின் தூதர்கள் இடம்பெற்றிருந்தனர். ஜம்மு காஷ்மீர் தேர்தலுக்காக அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டிருப்பதாக, வெளிநாட்டு குழுவில் இடம்பெற்ற அமெரிக்க துணைத் தூதர் ஜோர்கன் கே ஆண்ட்ரூஸ் கூறினார்.
ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பூஞ்ச் மாவட்டத்தின் சூரன்கோட் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.