மதியம் 1 மணி வாக்குப்பதிவு நிலவரம்
ஜம்மு-காஷ்மீர் சட்டசபை தேர்தலில் மதியம் 1 மணி நிலவரப்படி 36.93 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
ஜம்மு - காஷ்மீர் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர் - தலைமை தேர்தல் ஆணையர்
ஜம்மு-காஷ்மீரில் 2ம் கட்ட தேர்தல் இன்று நடைபெற்று வரும் நிலையில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது,
ஜம்மு - காஷ்மீர் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இது வரலாற்றை உருவாக்கி வருகிறது. ஒட்டுமொத்த பள்ளத்தாக்கு மற்றும் ஜம்மு பகுதிகளில் ஆர்வமுடன் வாக்குப்பதிவு நடைபெற்று வருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. ஸ்ரீநகர் பள்ளத்தாக்கு பகுதியாக இருந்தாலும், இடையூறுகள் வரும் மலை உச்சிப்பகுதியாக இருந்தாலும் எல்லா பகுதிகளும் மக்கள் வாக்களிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
முந்தைய காலங்களில் தேர்தலை புறக்கணிக்க அழைப்புகள் வரும் பகுதிகளிலும் தற்போது மக்கள் வாக்களிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். ஜம்மு-காஷ்மீரில் அமைதியாகவும், ஆர்வமாகவும் தேர்தல் நடைபெறுவதை இது உலகிற்கு காட்டுகிறது. ஜம்மு-காஷ்மீர் சட்டசபை தேர்தலை வெளிநாடுகளை சேர்ந்த தூதரக அதிகாரிகளும் நேரில் பார்த்துள்ளனர்’ என்றார்.
காலை 11 மணி வாக்குப்பதிவு நிலவரம்
ஜம்மு-காஷ்மீர் சட்டசபை தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி 24.10 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
தேசிய மாநாடு கட்சி தலைவர் பரூக் அப்துல்லாவும் அவரது மகனும் கட்சியின் துணை தலைவருமான உமர் அப்துல்லாவும் ஸ்ரீநகரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தனர்.
ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், புட்காம் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியை வெளிநாடுகளை சேர்ந்த தூதரக அதிகாரிகள் குழுவினர் பார்வையிட்டனர்.
ஜம்மு-காஷ்மீர் தேசிய மாநாடு கட்சி துணைத் தலைவர் உமர் அப்துல்லா கந்தர்பால் மற்றும் புட்காம் சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடுகிறார். அவர் 2-வது கட்ட வாக்குப்பதிவு குறித்து கூறும்போது "நாம் இந்த தேர்தலுக்காக 10 வருடம் காத்திருந்தோம். முதல் கட்ட தேர்தல் நல்ல முறையில் நடந்து முடிந்தது. 2-வது கட்ட தேர்தலிலும் அதிக வாக்குகள் பதிவாகும் என எதிர்பார்க்கிறோம். இந்த பங்கேற்பு இந்திய அரசாங்கத்தால் அல்ல, இந்திய அரசாங்கம் செய்த அனைத்தையும் மீறி. மக்களை அவமானப்படுத்தியிருக்கிறார்கள், மக்களைத் தடுத்து நிறுத்தி துன்புறுத்துவதற்கு அரசாங்கத்தின் அனைத்து எந்திரங்களும் பயன்படுத்தப்பட்டன. எல்லா தேர்தல் நாட்களும் முக்கியமானவை. இந்த தேர்தலில் எனக்கு தனிப்பட்ட பங்கு உள்ளது ஆனால் எல்லா கட்டங்களும் முக்கியமானவை” என உமர் அப்துல்லா தெரிவித்தார்.
காலை 9 மணி வாக்குப்பதிவு நிலவரம்
ஜம்மு-காஷ்மீர் சட்டசபை தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 10.22 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது
பாரா ஒலிம்பிக் வில்வித்தை போட்டியில் வெண்கல பதக்கம் வனெ்ற ராகேஷ் குமார் கட்ராவில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை செலுத்தினார்.
பெண்கள் மட்டுமே நிர்வகிக்கும் பிங்க் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இந்த வாக்குச்சாவடியில் அதிகாரிகள் அனைவரும் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தனித்துவமான வாக்குச்சாவடியானது வரவேற்பு சூழலை உருவாக்குவதையும், தேர்தல் செயல்பாட்டில் பெண்களின் அதிக பங்களிப்பை ஊக்குவிப்பதையும் நோக்கமாக கொண்டுள்ளது.
"ஜம்மு காஷ்மீர் சகோதர சகோதரிகளே, இன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது, அதிக எண்ணிக்கையில் வந்து உங்கள் உரிமைகள், செழிப்பு மற்றும் செழிப்புக்காக வாக்களியுங்கள் - இந்தியாவுக்கு வாக்களியுங்கள். உங்கள் மாநில அந்தஸ்தை பறித்ததன் மூலம், பாஜக அரசு உங்களை அவமதித்து, உங்கள் அரசியலமைப்பு உரிமைகளுடன் விளையாடியுள்ளது. இந்தியாவுக்கான உங்கள் ஒவ்வொரு வாக்கும் பாஜகவால் உருவாக்கப்பட்ட இந்த அநீதியின் தீய வட்டத்தை உடைத்து ஜம்மு காஷ்மீரை வளமான பாதையில் கொண்டு வரும்" என்று மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.