ஒரேயொரு நாள் மட்டும் போலீஸ் அதிகாரியான சிறுவர்கள்! சிறுவர்களின் ஆசையை நிறைவேற்றிய பெங்களூரு போலீஸ்

புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள இரண்டு சிறுவர்களின் போலீஸ் அதிகாரியாக வேண்டும் என்ற ஆசை நிறைவேறியது.

Update: 2022-07-23 05:04 GMT

பெங்களூரு,

புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள இரண்டு சிறுவர்களின் போலீஸ் அதிகாரியாக வேண்டும் என்ற ஆசை நிறைவேறியது.

13 வயது சிறுவர்களான கேரளாவை சேர்ந்த முகமது சல்மான் மற்றும் பெங்களூரை சேர்ந்த பி மிதிலேஷ் ஆகிய இருவரும் உயிருக்கு ஆபத்தான புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இரண்டு வெவ்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், 'மேக் எ விஷ் இந்தியா' என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் அதிகாரிகளிடம் சிறுவர்கள் தங்கள் விருப்பத்தை தெரிவித்தனர். இந்த தன்னார்வ தொண்டு நிறுவனம், இதுவரை 77,358 குழந்தைகளின் விருப்பங்களை நிறைவேற்றியுள்ளது.

இதையடுத்து சிறுவர்களின் விருப்பத்தை நிறைவேற்ற, பெங்களூரு டிசிபியை தன்னார்வ தொண்டு நிறுவனம் அணுகியது. உடனே அதற்கான ஏற்பாடுகளை தென்கிழக்கு பிரிவு டி.சி.பி., சி.கே.பாபா செய்து கொடுத்தார்.

'ஒவ்வொரு குழந்தையும் விதவிதமாக ஆசைப்படும். சில குழந்தைகள் தங்களுக்கு மடிக்கணினி வேண்டும் என்பார்கள். மற்றவர்கள் ஒரு பிரபலத்தை சந்திக்க விரும்புகிறார்கள் அல்லது ஏதாவது ஒரு இடத்திற்குச் செல்ல விரும்புகிறார்கள்" என்று தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் பெங்களூரு கிளையின் பொறுப்பாளர் அருண் குமார் கூறினார்.

காக்கிச்சட்டை அணிந்து கொண்ட சிறுவர்கள் இருவருக்கும், காவல்துறையின் அதிகார வரம்பு குறித்து அதிகாரிகள் விளக்கினர். சல்மானும், மிதிலேசும் டிசிபியிடம் ஐபிஎஸ் அதிகாரி ஆவது எப்படி என்பது பற்றியும் கேட்டறிந்தனர். சிறுவர்களின் கனவை நிறைவேற்றிய காவல்துறையின் செயலை பலரும் பாராட்டியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்