ஆளுநர் மாளிகையில் பிரதமர் மோடியை சால்வை அணிவித்து வரவேற்ற கவர்னர்

தெலுங்கானாவின், ஐதராபாத் நகரில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு சென்ற பிரதமர் மோடியை கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் சால்வை அணிவித்து வரவேற்றார்.

Update: 2022-07-03 16:21 GMT



ஐதராபாத்,



தெலுங்கானாவின் ஐதராபாத் நகரில் திட்டமிட்டபடி, பா.ஜ.க. தேசிய செயற்குழு கூட்டம் மாதாப்பூர் சர்வதேச கன்வென்சன் சென்டரில் நேற்று கோலாகலமுடன் தொடங்கியது. இதற்காக பிரதமர் மோடி, நேற்று தனி விமானத்தில் ஐதராபாத் விமான நிலையத்தில் வந்திறங்கினார்.

அவரை கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், கட்சி தலைவர் ஜே.பி. நட்டா மற்றும் பா.ஜ.க. தலைவர்கள் வரவேற்றனர். பிரதமர் மோடியின் வரவேற்பில் மாநில முதல்-மந்திரியும், தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி தலைவருமான சந்திரசேகர ராவ் கலந்து கொள்ளவில்லை. எனினும், அவரை வரவேற்க தெலுங்கானா மந்திரி ஒருவர் அனுப்பி வைக்கப்பட்டார்.

இது பெரிய சர்ச்சையானது. இதன்பின் நேற்று முதல் நாள் கூட்டம் நடந்து முடிந்தது. இந்நிலையில், தெலுங்கானாவின் ஐதராபாத் நகரில் இன்று 2வது நாள் தேசிய செயற்குழு கூட்டம் நடந்தது. தேசிய செயற்குழு கூட்டத்தின் முதல் நாளில் பொருளாதார தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 2வது நாளான இன்று அரசியல் தீர்மானம் பற்றி பேசப்பட்டது.

இதன்பின்னர் ஐதராபாத் நகரில் நடைபெற்ற பொது கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் பேசும்போது: தெலுங்கானா மக்கள் கடின உழைப்புக்கு பெயர் போனவர்கள். திறமை மிக்கவர்கள். தெலுங்கானா அதன் கலாசாரம் மற்றும் வரலாற்று பெருமைக்காகவும் அறியப்படுகிறது. பா.ஜ.க.வின் இரட்டை என்ஜின் கொண்ட அரசாங்கம் மீதுள்ள நம்பிக்கை பிற மாநிலங்களிலும் அதிகரித்து உள்ளது.

தெலுங்கானாவில் கூட பா.ஜ.க.வின் இரட்டை இயந்திர ஆட்சிக்கு மக்கள் வழி வகுத்து வருகின்றனர் என கூறினார். கடந்த 8 ஆண்டுகளில் ஏழைகள், தலித், பிற்படுத்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்கள் நலனுக்காக பல திட்டங்களை நாங்கள் தொடங்கியுள்ளோம். இதன்காரணமாகவே சமூகத்தில் அனைத்து பிரிவு மக்களுக்கும் எங்கள் அரசு மற்றும் அதன் கொள்கைகள் மீது நம்பிக்கை அதிகரித்துள்ளது என்று அவர் பேசியுள்ளார்.

இந்நிலையில், ஐதராபாத் நகரில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு பிரதமர் மோடி சென்றார். அவரை கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் இன்முகத்துடன் வரவேற்றார். அவருக்கு சால்வை அணிவிக்கப்பட்டது. பிரதமர் மோடிக்கு சிறப்பு பரிசுகளையும் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், அவருடன் உயரதிகாரிகளும் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்