74 விமான நிலையங்களை மத்திய அரசு திறந்ததாக கூறுவது பொய் - ப.சிதம்பரம்
கடந்த 7 ஆண்டுகளில் 74 விமான நிலையங்களை திறந்ததாக மத்திய அரசு கூறுவது பொய் என முன்னாள் மத்திய மந்திரி ப. சிதம்பரம் கூறியுள்ளார்.
புதுடெல்லி,
இந்தியாவில் 9 ஆண்டுகளில் 74 புதிய விமான நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளதாகவும் 11 பசுமைவழி விமான நிலையங்கள் பயன்பாட்டுக்கு வந்ததாகவும் விமான போக்குவரத்துறை இணை மந்திரி எழுத்துப்பூர்வமாக நாடாளுமன்றத்தில் தகவல் அளித்தார்.
இது குறித்து முன்னாள் மத்திய மந்திரி ப. சிதம்பரம் டுவிட்டர் பதிவில்,
கடந்த 7 ஆண்டுகளில் 74 விமான நிலையங்களை திறந்ததாக மத்திய அரசு கூறுவது உண்மைக்கு புறம்பானது. மே 2014-ல் இருந்து திறக்கப்பட்ட விமான நிலையங்களில் 11 மட்டுமே செயல்படுகின்றன.
விமானங்கள் வந்து செல்லாததால் 74 விமான நிலையங்களில் 15 விமான நிலையங்கள் இயங்குவதே இல்லை. பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு 479 புதிய பாதைகளை அறிமுகப்படுத்தியது. இவற்றில் 225 செயல்பாட்டில் இல்லை.
அரசாங்கத்தின் ஒவ்வொரு திட்டமும் ஓரளவு உண்மையாகவும், பெரும்பாலும் பொய்யாகவும் அம்பலப்படுத்தப்படலாம். பெருமை மற்றும் மிகைப்படுத்தலுக்கான அடையாளம் தான் இந்த அரசு என பதிவிட்டுள்ளார்.