தெலுங்கானா: பொதுத்தேர்வுக்கான கேள்வித்தாளை வாட்ஸ்அப்பில் கசிவு - 4 அரசு ஊழியர்கள் இடைநீக்கம்

தேர்வு அமைதியாக நடந்து முடிந்தது என்றும், எந்த முறைகேடும் நடக்கவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்

Update: 2023-04-05 00:19 GMT

ஐதராபாத்,

தெலுங்கானா மாநிலத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் நாளில், தெலுங்கு மொழி தேர்வு நடந்தது. விகராபாத் மாவட்டத்தில் ஒரு அரசு பள்ளியில் தேர்வு நடந்தபோது, தேர்வு கண்காணிப்பாளராக இருந்தவர், தேர்வு தொடங்கியவுடன் கேள்வித்தாளை தனது செல்போனில் படம் பிடித்தார்.

பிறகு அதே மாவட்டத்தில் உள்ள மற்றொரு அரசு பள்ளியின் ஆசிரியருக்கு அந்த கேள்வித்தாளை 'வாட்ஸ்அப்' மூலம் அனுப்பி வைத்தார். கேள்விகளுக்கு பதிலை தயார் செய்வதற்காக அப்படி பகிர்ந்தார்.

இந்த தகவல், செய்தி சேனல்கள் மூலம் பரவியவுடன், 2 பேரும் பயந்து, தங்கள் செல்போனில் இருந்த கேள்வித்தாளை அழித்தனர். இருப்பினும், அவர்கள் 2 பேர் உள்பட 4 அரசு ஊழியர்களை மாவட்ட கலெக்டர் இடைநீக்கம் செய்தார்.

தேர்வு அமைதியாக நடந்து முடிந்தது. இது தனிப்பட்ட நிகழ்வு என்றும், எந்த முறைகேடும் நடக்கவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். இருப்பினும், கல்வி மந்திரி சபிதா இந்திரா ரெட்டி பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்