தேசியக்கொடி இல்லாத வீடுகளின் புகைப்படங்களை எனக்கு அனுப்பவும் - சர்ச்சையில் சிக்கிய பாஜக தலைவர் விளக்கம்

உத்தராகண்ட் பாஜக தலைவர், தேசியக் கொடி இல்லாத வீடுகளின் புகைப்படங்களை தனக்கு அனுப்புமாறு உத்தரவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Update: 2022-08-12 10:41 GMT

டேராடூன்,

நாடு முழுவதும் 75-வது சுதந்திர தினத்தை ஒட்டி இல்லந்தோறும் தேசியக் கொடியை ஏற்றிக் கொண்டாடுமாறு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்.

இந்நிலையில், உத்தரகண்ட் மாநில பாஜக தலைவர் மகேந்திர பட், தேசியக் கொடி இல்லாத வீடுகளின் புகைப்படங்களை எடுத்துத் தனக்கு அனுப்புமாறு கட்சியினருக்கு உத்தரவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பொது நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அவர் பேசுகையில், "மக்கள் தங்கள் வீடுகளில் மூவர்ணக் கொடியை ஏற்றவில்லை என்றால் மக்களின் தேசியம் கேள்விக்குறியாகிவிடும்.

சுதந்திர தினத்தன்று வீடுகளில் மூவர்ணக் கொடியை ஏற்றாத அத்தகைய வீடுகளின் உரிமையாளர்களை மக்கள் எப்படி நம்புவார்கள், நிச்சயம் நம்பிக்கையுடன் பார்க்கமாட்டார்கள்.

தேசியக் கொடி இல்லாத வீடுகளின் புகைப்படங்களை எடுத்துத் தனக்கு அனுப்புங்கள். இதன்மூலம், யாருக்கெல்லாம் தேசப்பற்று உள்ளதென்பதை மக்கள் தெரிந்து கொள்ளட்டும்" என்று பேசினார்.

இதற்கு எதிர்க்கட்சிகள், குறிப்பாக காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்தது. அவரின் இந்தப் பேச்சுக்கு காங்கிரஸ் கட்சியினர் கடும் கண்டனங்களைத் தெரிவித்தனர்.

இந்த சர்ச்சை தொடர்பாக பாஜக தலைவர் மகேந்திர பட் விளக்கமளித்துள்ளார். அதில் அவர், "நான் பாரதிய ஜனதா கட்சித் தொண்டர்களின் வீடுகளில் கட்டாயமாக தேசியக் கொடி ஏற்ற வேண்டும் என்றுதான் சொல்லியிருந்தேன்.

பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று கட்சித் தொண்டர் ஒவ்வொருவரும் வீடுகளில் தேசியக் கொடி ஏற்ற வேண்டும் என்பதற்காகவே அதனைக் கூறியிருந்தேன். இருப்பினும், இந்தத் தேசத்தின் மீது பற்று கொண்ட எவருமே, தேசியக் கொடியை வீட்டில் ஏற்ற தயங்க மாட்டார்கள் என நம்புகிறேன்" என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்