எஸ்.எஸ்.எல்.வி-டி3 ராக்கெட் வெற்றி: குறிப்பிடத்தக்க மைல்கல் - பிரதமர் மோடி பாராட்டு

செலவு குறைந்த எஸ்.எஸ்.எல்.வி ராக்கெட் விண்வெளி திட்டங்களில் முக்கிய பங்கு வகிக்கும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.;

Update:2024-08-17 03:58 IST

புதுடெல்லி,

இந்திய விண்வெளி ஆய்வு மையமான 'இஸ்ரோ' குறைந்த எடை கொண்ட செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த எஸ்.எஸ்.எல்.வி-டி3 ராக்கெட்டை வடிவமைத்துள்ளது. புவி கண்காணிப்பு செயல்பாடுகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ள இ.ஓ.எஸ்.-08 என்ற செயற்கைக்கோளை சுமந்தபடி, எஸ்.எஸ்.எல்.வி-டி3 ராக்கெட் நேற்று காலை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

மூன்று நிலைகளை கொண்ட எஸ்.எஸ்.எல்.வி-டி3 ராக்கெட்டுக்கான எரிபொருள் திட வகையை சேர்ந்ததாகும். இந்த ராக்கெட் திட்டமிட்ட நேரத்தில் பூமியில் இருந்து புறப்பட்டு சரியாக 13 நிமிடத்தில், குறைந்த புவி வட்ட சுற்றுப்பாதையில் இந்த செயற்கைக்கோளை வெற்றிகரமாக நிலைநிறுத்தியது.

இந்த நிலையில் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "எஸ்.எஸ்.எல்.வி-டி3 ராக்கெட் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது, ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்! இந்த சாதனைக்காக நமது விஞ்ஞானிகள் மற்றும் தொழில்துறையினருக்கு வாழ்த்துகள்.

இந்தியா இப்போது ஒரு புதிய ராக்கெட்டை வைத்திருப்பது மிகவும் மகிழ்ச்சியான விஷயம். செலவு குறைந்த எஸ்.எஸ்.எல்.வி ராக்கெட் விண்வெளிப் பயணங்களில் முக்கியப் பங்காற்றுவதுடன், தனியார் தொழிலையும் ஊக்குவிக்கும். இஸ்ரோ மற்றும் ஒட்டுமொத்த விண்வெளி துறைக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்" என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்