'ஆபரேஷன் தாமரை' நாட்டின் ஆன்மாவை அழிக்கிறது- சரத்பவார் வேதனை
'ஆபரேஷன் தாமரை' நாட்டின் ஆன்மாவை அழிக்கிறது என சரத்பவார் வேதனை தெரிவித்து உள்ளார்.
மும்பை,
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கர்மவீரர் பாவுராவ் பாட்டீல் 64-வது நினைவு நாளையொட்டி சத்தாராவில் உள்ள அவரது கல்லறையில் அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது:- சகிப்பு தன்மை மற்றும் மதச்சார்பின்மை தான் நமது நாட்டின் ஆன்மா. ஆனால் ஆபரேஷன் தாமரை என்ற பெயரில் இதை அழிக்கும் நிலைப்பாட்டை பா.ஜனதா எடுத்து உள்ளது. 'ஆபரேஷன் தாமரை' நாட்டின் ஆன்மாவை அழிக்கிறது. பா.ஜனதா மத குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறது.
ஆட்சி அதிகாரம் கிடைக்கவில்லை எனில் அதற்காக எதையும் செய்யும் பா.ஜனதாவின் கொள்கை ஆபத்தானது. அது அதிகார மோதலை அதிகரிக்கிறது. பா.ஜனதா மற்ற கட்சிகளின் எம்.எல்.ஏ.க்களை உடைத்து மராட்டியம், கர்நாடகா, மத்திய பிரதேசத்தில் ஆட்சி அமைத்து உள்ளது. மாநிலத்தில் முதல்-மந்திரிஏக்நாத் ஷிண்டே பா.ஜனதா கொடுக்கும் உத்தரவுகளை ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும். காங்கிரசுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் குறைந்த இடங்களில் கர்நாடக தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் போட்டியிடுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.