கேரளாவில் அதிர்ச்சி; 15 ஆண்டுகளுக்கு முன் இளம்பெண் மாயம்... காதல் கணவரின் வீட்டில் உடல் மீட்பு

கேரளாவில் 15 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன இளம்பெண், அவருடைய கணவர் மற்றும் அவரின் நெருங்கிய உறவினர்களால் கொல்லப்பட்டு உள்ளார்.

Update: 2024-07-03 21:46 GMT

ஆலப்புழா,

கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில் மன்னார் பகுதியை சேர்ந்தவர் கலா. இவருடைய கணவர் அனில் குமார். வெவ்வேறு சமூகத்தினர். குடும்பத்தினரின் எதிர்ப்பை மீறி இவர்கள் இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு ஒரு மகனும் இருக்கிறார்.

இந்நிலையில், கடந்த 2008-2009-ம் ஆண்டில் வீட்டில் இருந்த கலா காணாமல் போனார். அப்போது அவருக்கு வயது 20. ஆனால், கலா நகைகளை எடுத்து கொண்டு யாரோ ஒருவருடன் ஓடிப்போய் விட்டார் என கிராமவாசிகளிடையே அப்போது புரளி பரவியது.

இதன்பின்னர், அனில் மறுமணம் செய்து கொண்டு இஸ்ரேல் நாட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில், கலா காணாமல் போனது பற்றி சில மாதங்களுக்கு முன், அம்பலப்புழா காவல் நிலையத்திற்கு உளவு தகவல் சென்றது. இதனை தொடர்ந்து போலீசார் விசாரணையை தொடங்கினர்.

போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவல் அடிப்படையில் கணவர் அனிலின் வீட்டில் இருந்த கழிவறை தொட்டியை சோதனை செய்தனர். அதில், கலாவின் உடல் அடையாளம் தெரியாத அளவில் கிடந்துள்ளது. அதனை கைப்பற்றி விசாரணை நடந்தது.

இதில், 5 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த வழக்கில் அனிலின் நெருங்கிய உறவினரான சோமராஜன் மற்றும் பிற உறவினர்களான ஜினு கோபி, பிரமோத் மற்றும் மற்றொரு குற்றவாளி என 4 பேருக்கு தொடர்பு உள்ளது என தெரிய வந்துள்ளது.

இதுபற்றிய எப்.ஐ.ஆர். பதிவில், 4 பேரும் காரில் வைத்து கலாவை கொலை செய்து, கழிவறை தொட்டியில் போட்டு விட்டு, சிமெண்ட் கொண்டு மூடி விட்டனர். கலாவுக்கு வேறு யாருடனோ கள்ளத்தொடர்பு இருந்திருக்கும் என்ற சந்தேகத்தில் அவர் கொல்லப்பட்டு உள்ளார் என எப்.ஐ.ஆர். பதிவு தெரிவிக்கின்றது.

அனில் தன்னுடைய வீட்டை புதுப்பித்த போதும், கழிவறை தொட்டியை எதுவும் செய்யாமல் பழைய நிலையிலேயே விட்டுள்ளார். இதுபற்றி கேள்வி கேட்ட பக்கத்து வீட்டுக்காரர்களிடம் வாஸ்துவுக்காக என கூறியிருக்கிறார்.

இதுபற்றி ஆலப்புழா எஸ்.பி. சைத்ர தெரசா ஜான் கூறும்போது, இஸ்ரேலில் உள்ள அனிலை கேரளா கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 5 பேர் போலீசாரின் காவலில் உள்ளனர். அவர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்படும் என்று கூறியுள்ளார்.

இந்த விவகாரத்தில், கலா ஓடிப்போய் விட்டார் என கிராமவாசிகளிடையே அப்போது புரளி பரப்பியது அனில் என்பதும், மகனிடம் கலா உயிருடன் இருக்கிறார். வந்து விடுவார் என பொய் கூறியதும் தெரிய வந்துள்ளது.

15 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன இளம்பெண், அவருடைய கணவர் மற்றும் அவரின் நெருங்கிய உறவினர்களால் கொல்லப்பட்டு வீட்டு கழிவறை தொட்டியில் புதைக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்