மாநிலத்தின் முக்கிய வருவாயாக லாட்டரி, மது இருப்பது குறித்து வெட்கப்படுகிறேன் - கேரளா கவர்னர் ஆரிப் முகமது கான்

கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் தென் மாநிலத்தின் இரண்டு முக்கிய வருவாய் ஆதாரங்களாக லாட்டரி மற்றும் மதுபானமாக இருப்பது குறித்து வெட்கப்படுவதாக கூறினார்.

Update: 2022-10-22 14:43 GMT

கேரளா:

பல்கலைக்கழகங்களுக்கு நியமனம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் இடதுசாரி அரசாங்கத்துடன் முரண்பட்ட கேரளா கவர்னர் ஆரிப் முகமது கான், மது அருந்துவதற்கு எதிராக அனைவரும் பிரச்சாரம் செய்தாலும், கேரளா அதன் பயன்பாட்டை ஊக்குவிப்பதாக கூறினார்.

கேரளா கவர்னர் ஆரிப் முகமது கான் ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் பேசுகையில்,

கேரளா மதுபான விற்பனையை ஊக்குவிப்பதால், போதைப்பொருள்களின் தலைநகராக பஞ்சாப் பதிலாக கேரளா மாறுகிறது. எல்லோரும் மது அருந்துவதற்கு எதிராக பிரச்சாரங்களை மேற்கொள்கிறார்கள். ஆனால் இங்கு மது அருந்துதல் ஊக்குவிக்கப்படுகிறது. இது என்ன அவமானம்.

இங்கே, நமது வளர்ச்சிக்கு லாட்டரியும், மதுவும் போதும் என்று முடிவு செய்துள்ளோம். இது 100 சதவீத எழுத்தறிவு பெற்ற மாநிலத்தின் அவமானகரமான நிலை. மாநிலத்தின் தலைவரான நான், மாநிலத்தின் இரண்டு முக்கிய வருவாய் லாட்டரி மற்றும் மது என்பது குறித்து வெட்கப்படுகிறேன்.

லாட்டரி என்றால் என்ன? இங்கே அமர்ந்திருக்கும் உங்களில் யாராவது எப்போதாவது லாட்டரி சீட்டு வாங்கியிருக்கிறீர்களா? மிகவும் ஏழைகள் மட்டுமே லாட்டரி சீட்டுகளை வாங்குகிறார்கள். நீங்கள் அவர்களைக் கொள்ளையடிக்கிறீர்கள். உங்கள் மக்களை மதுவுக்கு அடிமையாக்குகிறீர்கள் என குற்றம் சாட்டினார்.

மேலும் கேரளாவில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பான பிரச்சினையையும் அவர் எழுப்பினார். துணைவேந்தர்களை நியமிப்பது ஆளுநரின் பொறுப்பு என்று உச்ச நீதிமன்றமே முன்பே தெளிவுபடுத்தியது.

அதில் மாநில அரசுக்கு எந்தப் பங்கும் இல்லை என்றும், அரசு ஏதேனும் சட்டம் இயற்றினால், அது பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) விதிமுறைகளின்படி இருக்க வேண்டும், என்று அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்