சபரிமலையில் இருந்து தபால் மூலம் ரூ.1¼ லட்சம் பிரசாதம் பக்தர்களுக்கு அனுப்பி வைப்பு

சபரிமலையில் இருந்து தபால் மூலம் ரூ. 1¼ லட்சம் பிரசாதம் பக்தர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Update: 2022-12-04 21:14 GMT

திருவனந்தபுரம்,

சபரிமலையில் இருந்து தபால் மூலம் ரூ. 1¼ லட்சம் பிரசாதம் பக்தர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்கு சீசனையொட்டி கடந்த மாதம் 16-ந்தேதி நடை திறக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து சபரிமலை தபால் நிலையமும் 17-ந் தேதி முதல் செயல்பட்டு வருகிறது.

இந்த தபால் நிலையம் மூலமாக, சபரிமலை பிரசாதத்திற்கு முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு விரைவு தபால் மூலம் பிரசாதங்கள் அனுப்பப்பட்டு வருகிறது. இதன் மூலம் நாட்டின் எந்த பகுதியில் இருந்தும் தபால் நிலையங்கள் மூலமாக முன்பதிவு செய்யும் அய்யப்ப பக்தர்களுக்கு ரூ.520, ரூ.960, ரூ.1,760 என 3 விதமாக பிரசாதங்கள் அனுப்பப்பட்டு வருகிறது.

இதன்படி ரூ.520-க்கான பிரசாத பார்சலில், ஒரு அரவணை டின், ரூ.960-க்கான பிரசாத பார்சலில், 4 அரவணை டின், ரூ.1,760 -க்கான பிரசாத பார்சலில் 10 அரவணை டின் மற்றும் அனைத்து பிரசாத தபாலிலும் நெய், குங்குமம், மஞ்சள், விபூதி ஆகியவை சேர்த்து அனுப்பப்படும். முன்பதிவு செய்தவர்களுக்கு பிரசாத தபால் விரைவு தபால் மூலமாக ஆர்டர் செய்த 7 நாட்களுக்குள் கிடைக்கும் வகையில், அனுப்பப்படுகிறது.

கடந்த 15 நாட்களில் 208 பிரசாத ஆர்டர்கள் வந்துள்ளன. இதன் மூலம் ரூ 1 லட்சத்து 34 ஆயிரத்து 800 வருவாயாக கிடைத்து உள்ளது. இதுதவிர தபால் பட்டுவாடாவும் செய்யப்படுகிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து அய்யப்பனுக்கு ஏராளமான கடிதங்கள், மணியார்டர்கள் வருகின்றன. அதே போல் திருமணம், கிரகபிரவேஷம் ஆகியவற்றுக்கான அழைப்பிதழ்களும் சபரிமலை அய்யப்பனுக்கு வருகிறது. இந்த அழைப்பிதழ்கள் சாமி சன்னதியில் வைத்தபின், சபரிமலை செயல் அதிகாரியிடம் ஒப்படைக்கப்படுகிறது.

கடந்த 60 ஆண்டுகளாக சபரிமலையில் சாமி அய்யப்பன், சன்னிதானம் பி.ஓ 689713 என்ற விலாசத்தில் சபரிமலையில் தபால் நிலையம் செயல் பட்டு வருகிறது. தற்போது மண்டல, மகரவிளக்கு சீசனை முன்னிட்டு நடை திறக்கப்பட்டுள்ளதால், தபால் நிலைய பணியும் சுறுசுறுப்படைந்து உள்ளது. இந்த தபால் நிலையத்தில் ஒரே ஒரு பணியாளர் மட்டும் உள்ளார். கடந்த ஆண்டு மண்டல-மகரவிளக்கு சீசனையொட்டி, தபால் மூலம் பிரசாதம் அனுப்பிய வகையில், திருவிதாங்கூர் தேவஸ்தானம் மற்றும் அஞ்சல் துறைக்கு ரூ.2½ கோடி வருமானம் கிடைத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்