கோவாவில் சோனாலி போகத் மரணத்துடன் தொடர்புடைய ஓட்டலை இடிக்க தடை: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு!

இதனை தொடர்ந்து, அதிகாரிகள் மற்றும் குழுவினர் ஓட்டலை இடிக்கும் பணியை நிறுத்தியுள்ளனர்.

Update: 2022-09-09 06:19 GMT

பனாஜி,

நடிகையும் பாஜக பிரமுகருமான சோனாலி போகத் சமீபத்தில் மர்மமான முறையில் கோவாவில் உள்ள ஒரு ஓட்டலில் உயிரிழந்தார்.

இந்நிலையில், அவருடைய மரணத்துடன் தொடர்புடைய கோவா கர்லீஸ் உணவகம் ஆக்கிரமிப்பு பகுதிகளில் கடப்பட்டுள்ளதாக எழுந்த புகாரில் இன்று ஓட்டல் கட்டிடம் இடித்து தகர்க்கப்பட்டு வருகிறது.

வடக்கு கோவாவில் உள்ள அஞ்சுனாவில் உள்ள தி கர்லீஸ் உணவகத்தை இடிக்கும் பணியை கோவா அரசு நிர்வாகம் இன்று காலை தொடங்கியது.

சோனாலி போகாத் மரண வழக்கில் கைது செய்யப்பட்ட 5 பேரில் தி கர்லீஸ் உணவக உரிமையாளர் எட்வின் நூன்ஸ் ஒருவர். இந்த உணவகத்தில் தங்கியிருந்த போது சோனாலி போகத்துக்கு அவரின் உதவியாளர் போதை மருந்து கொடுத்ததாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிமுறைகளை மீறியதற்காக கோவாவில் உள்ள கர்லீஸ் உணவகம் இடிக்கப்படுகிறது. விதிமுறைகளை மீறி கட்டப்பட்டதாக எழுந்த புகாரில், அந்த ஓட்டலை இடிக்க உத்தரவிட்ட கோவா கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்தின் 2016ம் ஆண்டு உத்தரவுக்கு எதிராக தேசிய பசுமை தீர்ப்பாயத்திடம் இருந்து எந்த கால அவகாசத்தையும் ஓட்டலின் உரிமையாளர் பெறவில்லை.

இந்த நிலையில், இந்த வழக்கை நீதிபதி ஆதர்ஷ் குமார் கோயல் தலைமையிலான தேசிய பசுமை தீர்ப்பாய அமர்வு செப்டம்பர் 6ஆம் தேதி விசாரித்தது.அப்போது நீதிபதிகள் அமர்வு, கோவா கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்தின் முந்தைய உத்தரவான உணவக நிர்வாகம் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த உத்தரவை மீண்டும் உறுதி செய்தது.

அதனை தொடர்ந்து, வியாழக்கிழமை, ஓட்டலை இடிக்க மாவட்ட நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியது. இன்று காலை 7.30 மணியளவில் வந்த குழுவினர் ஓட்டலை இடிக்கும் பணிகளில் ஈடுபட்டனர். இதனால் அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

கோவாவில் உள்ள கர்லீஸ் உணவகத்தை இடிக்க, சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்துள்ளது. ஓட்டலில் வணிக நடவடிக்கைகள் எதுவும் நடைபெறக்கூடாது என்ற நிபந்தனைக்கு உட்பட்டு கட்டிடத்தை இடிப்பதற்கு கோர்ட்டு தடை உத்தரவு பிறப்பித்தது.

இதனை தொடர்ந்து, அதிகாரிகள் மற்றும் குழுவினர் ஓட்டலை இடிக்கும் பணியை நிறுத்தியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்