14-ந்தேதி மகரவிளக்கு பூஜை; சபரிமலையில் குவியும் பக்தர்கள்

மகரஜோதி தரிசனத்தை காண ஏராளமான பக்தர்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்தனர். ஒரு நாளைக்கு 90 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே முன்பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

Update: 2023-01-08 09:26 GMT

திருவனந்தபுரம்,

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக கடந்த நவம்பர் மாதம் 16-ந்தேதி நடை திறக்கப்பட்டது முதல் பக்தர்கள் கூட்டம் சபரிமலையில் அலைமோதியது. ஆன்லைன் முன்பதிவு மற்றும் உடனடி முன்பதிவு செய்தே பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த 27-ந் தேதி மண்டல பூஜை நிறைவுபெற்றதை தொடர்ந்து அன்று இரவு நடை சாத்தப்பட்டது தொடர்ந்து மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை கோவில் நடை கடந்த 30-ந் தேதி மீண்டும் திறக்கப்பட்டது. 14-ந்தேதி நடைபெறும் மகரவிளக்கு பூஜைக்கான சுத்திகிரியைகள் வருகிற 12 மற்றும் 13-ந் தேதிகளில் நடைபெறுகிறது.

பந்தளம் அரண்மனையில் இருந்து ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் திருவாபரணம் 12-ந்தேதி யாத்திரையாக கொண்டு செல்லப்படுகிறது. எரிமேலி வழியாக 14-ந்தேதி சபரிமலை அடைந்ததும் மாலை 6.30 மணிக்கு ஐயப்பனுக்கு திருவாபரணம் அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடக்கிறது. மகரவிளக்கு பூஜை அன்று இரவு 11.30 மணி வரை நடை திறந்திருக்கும். தொடர்ந்து 19-ந்தேதி வரை படி பூஜை நடக்கிறது. 20-ந்தேதி பந்தளம் ராஜ பிரதிநிதி சபரிமலை சன்னிதானத்தில் சுவாமி தரிசனம் செய்வதை தொடர்ந்து மகரவிளக்கு பூஜை நிறைவு பெறுகிறது. அதன்பிறகு கோவில் நடை சாத்தப்படும் என்று தேவஸ்தான அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதனிடையே, மகரஜோதி தரிசனத்தை காண ஏராளமான பக்தர்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்தனர். ஒரு நாளைக்கு 90 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே முன்பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டனர். இதனால் 14-ந்தேதி வரையிலான ஆன்லைன் முன்பதிவு கடந்த 2 நாட்களுக்கு முன்பே முடிவடைந்து விட்டது. இனி மகரஜோதி தரிசனம் காண விரும்புபவர்கள் உடனடி பதிவு மூலம் மட்டுமே பதிவு செய்து தரிசனம் செய்ய வாய்ப்பு உள்ளதாக தேவசம்போர்டு அறிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்