'ஹனிடிராப்' முறையில் டாக்டரிடம் ரூ.50 லட்சம் பறிப்பு; கலபுரகியை சேர்ந்த 3 பேர் கைது

மருத்துவ கல்லூரியில் மகனுக்கு சீட் கொடுப்பதாக கூறி ரூ.66 லட்சம் மோசடி செய்ததுடன், ஹனிடிராப் முறையில் டாக்டரை மிரட்டி ரூ.50 லட்சம் பறித்ததாக கலபுரகியை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2022-05-27 15:53 GMT

பெங்களூரு: மருத்துவ கல்லூரியில் மகனுக்கு சீட் கொடுப்பதாக கூறி ரூ.66 லட்சம் மோசடி செய்ததுடன், ஹனிடிராப் முறையில் டாக்டரை மிரட்டி ரூ.50 லட்சம் பறித்ததாக கலபுரகியை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மருத்துவ கல்லூரியில் சீட்

கலபுரகி மாவட்டம் ஆலந்தா தாலுகா மந்தனஹள்ளி கிராமத்தில் ஒரு டாக்டர் வசித்து வருகிறார். அவர், அதே கிராமத்தில் கிளினிக் வைத்து நடத்தி வருகிறார். இதற்கிடையில், அந்த டாக்டரின் மகன் பி.யூ.சி. 2-வது ஆண்டு தேர்வில் 80 சதவீத மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றிருந்தார். இதையடுத்து, தனது மகனுக்கு தனியார் மருத்துவ கல்லூரியில் சீட் வாங்க டாக்டர் முடிவு செய்தார்.

அப்போது கடந்த ஆண்டு (2021) ஜனவரி மாதம் கலபுரகியை சேர்ந்த நாகராஜ் என்பவருடன் டாக்டருக்கு பழக்கம் ஏற்பட்டது. தனக்கு பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவ கல்லூரியின் நிர்வாகிகளை தெரியும் என்றும், அவா்கள் மூலமாக உங்களது மகனுக்கு மருத்துவ கல்லூரியில் சீட் வாங்கி தருவதாக டாக்டரிடம் நாகராஜ் கூறி இருந்தார்.

ரூ.66 லட்சம் மோசடி

பின்னர் பெங்களூருவுக்கு வந்த டாக்டரிடம், கடந்த ஆண்டு பிப்ரவரியில் இருந்து மார்ச் வரை பல்வேறு தவணைகளில் ரூ.66 லட்சத்தை நாகராஜ் வாங்கி இருந்தார். ஆனால் டாக்டரின் மகனுக்கு தனியார் மருத்துவ கல்லூரியில் நாகராஜ் சீட் வாங்கி கொடுக்கவில்லை. இதையடுத்து, பணத்தை திரும்ப கொடுக்கும்படி நாகராஜிடம் டாக்டர் கேட்டுள்ளார். உடனே பெங்களூருவுக்கு வரும்படி டாக்டரிடம் நாகராஜ் கூறியுள்ளார். அதன்படி, பெங்களூரு வந்த டாக்டரை மெஜஸ்டிக் அருகே உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் நாகராஜ் அறை எடுத்து தங்க வைத்துள்ளார்.

இந்த நிலையில், டாக்டர் தங்கி இருந்த அறைக்கு 2 இளம்பெண்கள் சென்றனர். அவர்கள் டாக்டருடன் அரைகுறை ஆடைகளுடன் ஆபாசமாக இருப்பது போன்று படம் எடுத்தனர். பின்னர் அவர்கள் அந்த ஆபாச படங்களை டாக்டரை மிரட்டி உள்ளனர்.

ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டல்

அந்த சந்தர்ப்பத்தில் தனியார் தங்கும் விடுதிக்கு வந்த நாகராஜ், அவரது கூட்டாளிகள் மது, ஓம்பிரகாஷ் ஆகிய 3 பேரும், இளம்பெண்களிடம் இருந்த ஆபாச பபடங்களை வாங்கி கொண்டு, அதனை வெளியிடாமல் இருக்க ரூ.50 லட்சம் கொடுக்கும்படி கேட்டு டாக்டரை மிரட்டினர்.

இதனால் பயந்து போன டாக்டர் கலபுரகிக்கு சென்று ஆலந்தாவில் உள்ள தனது வீடு, நிலத்தை அடகு வைத்து ரூ.50 லட்சத்தை நாகராஜிடம் கொடுத்துள்ளார். அதன்பிறகும், ரூ.20 லட்சம் கொடுக்கும்படி கேட்டு 3 பேரும் டாக்டரை மிரட்டி உள்ளனர்.

3 பேர் கைது

இதுபற்றி பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசில் டாக்டர் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கலபுரகியை சேர்ந்த நாகராஜ், அவரது கூட்டாளிகள் மது, ஓம்பிரகாசை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பல லட்சம் மதிப்பிலான நகை, பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைதான 3 பேர் மீதும் உப்பார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்