துபாய் தொழில் அதிபரிடம் ரூ.2½ கோடி மோசடி
கேரளாவில் நிலம் வாங்கி கொடுப்பதாக துபாய் தொழில் அதிபரிடம் ரூ.2.40 கோடி மோசடி செய்த உறவினரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
மங்களூரு:
தொழில் அதிபர்
கேரளாவை சேர்ந்தவர் அப்துல்லா. தொழில் அதிபரான இவர், துபாயில் வசித்து வருகிறார். அங்கு தொழிலும் செய்து வருகிறார். இந்த நிலையில் அவருக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பு மங்களூரு பழனீர் பகுதியில் உள்ளது. அந்த குடியிருப்பை அப்துல்லாவின் உறவினரான முகமது அப்துல் மஜித் என்பவர் கவனித்து வருகிறார். இந்த நிலையில், அப்துல்லா, தனது சொந்த ஊரான கேரளாவில் நிலம் வாங்க முடிவு செய்தார்.
இதுபற்றி முகமது அப்துலிடம் அப்துல்லா தெரிவித்துள்ளார். இந்த நிலையில், முகமது அப்துல் அவரிடம் இருந்து பணம் பறிக்க திட்டமிட்டுள்ளார்.
ரூ.2.40 கோடி மோசடி
அதன்படி, அப்துல்லாவை தொடர்புகொண்ட முகமது அப்துல், கேரளாவில் ஒரு ஏக்கர் நிலம் இருப்பதாகவும், அதன் மதிப்பு ரூ.2.40 கோடி என்றும் தெரிவித்துள்ளார். இதனை நம்பிய அப்துல்லா, நிலத்துக்கான பணத்தை முகமது அப்துலுக்கு அனுப்பி வைத்தார். இந்த நிலையில் சமீபத்தில் கேரளாவுக்கு வந்த அப்துல்லா, நிலத்தை பார்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
அப்போது நிலம் வாங்கியதற்கான ஆவணங்களை காண்பித்த முகமது அப்துல், நிலத்தை அவருக்கு காண்பிக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த அப்துல்லா, அந்த ஆவணங்களை பரிசோதனை செய்தார். அப்போது அது போலியானது என்பது தெரியவந்தது. இதனால் முகமது அப்துல், தன்னிடம் நிலம் வாங்கி தருவதாக கூறி ரூ.2.40 கோடியை மோசடி செய்தது தெரியவந்தது.
வலைவீச்சு
இதுகுறித்து மங்களூரு போலீசில் அப்துல்லா புகார் அளித்தார். இதுபற்றி அறிந்ததும் முகமது அப்துல் தலைமறைவாகி விட்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமது அப்துலை வலைவீசி தேடி வருகிறார்கள்.