ஓராண்டாக உடலுறவுக்கு மறுப்பு; கணவர் மீது மனைவி போலீசில் புகார்

கர்நாடகாவில் திருமணம் முடிந்து ஓராண்டாக உடலுறவுக்கு கணவர் மறுக்கிறார் என கூறி அவருக்கு எதிராக மனைவி போலீசில் புகார் அளித்து உள்ளார்.

Update: 2023-06-10 03:35 GMT

பெங்களூரு,

கர்நாடகாவின் ஹாசன் மாவட்ட பகுதியை சேர்ந்த நபருக்கும், மாண்டியா மாவட்டத்தில் வசித்து வந்த 21 வயது பெண்ணுக்கும் இடையே ஓராண்டுக்கு முன் திருமணம் நடந்தது.

இந்த நிலையில், திருமணம் முடிந்து ஓராண்டானபோதும், உடலுறவுக்கு கணவர் மறுக்கிறார் என கூறி அவருக்கு எதிராக மனைவி பரப்பன அக்ரஹாரா போலீசிடம் பரபரப்பு புகார் அளித்து உள்ளார்.

அதில், இரு வீட்டார் முடிவு செய்து இந்த திருமணம் நடந்தது. அதற்கு முன்பு வரை இரு குடும்பத்தினருக்கும் இடையே அறிமுகம் இல்லை. இந்த திருமணத்தில் தனக்கு எந்தவித சந்தோஷமும் இல்லை.

ஒரு மகிழ்ச்சியான திருமண வாழ்க்கைக்கான எனது கனவு எல்லாவற்றையும் அவர் நொறுக்கி விட்டார். அவர், சிறு சிறு விசயங்களுக்கு கூட கோபப்படுபவராக உள்ளார்.

இவை எல்லாவற்றையும் விட ஓராண்டாக அவர் தாம்பத்தியத்தில் ஈடுபட மறுக்கிறார். இருவரும் பரஸ்பர ஒப்புதலுடனான விவாகரத்து கோருவதற்கும் அவர் தயாராக இல்லை.

இருவருக்கும் இடையே ஒத்து போகவில்லை. அவரது காதல் கூட உள்ளார்ந்த ஒன்றாக இல்லை என புகாரில் தெரிவித்து உள்ளார். இவரது கணவர் எலக்ட்ரானிக் சிட்டி நகருக்கு வெளியே செயல்பட்டு வரும் பாதுகாப்பு சேவை நிறுவனம் ஒன்றின் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், உத்தர பிரதேசத்தின் அலகாபாத் ஐகோர்ட்டு கடந்த மாதம் விவாகரத்து வழக்கு ஒன்றின் விசாரணையின்போது, எந்தவித காரணமும் இன்றி வாழ்க்கை துணையுடன் நீண்ட காலம் உடலுறவை மறுப்பது, அவர்களை மனரீதியாக துன்புறுத்துவதற்கு சமம் என்று கூறியிருந்தது.

டெல்லி ஐகோர்ட்டும் முன்பு வழக்கு ஒன்றில் அளித்த தீர்ப்பில், இணைந்து வாழும் தம்பதிக்கு இடையே, ஓராண்டாக உடலுறுவுக்கு மறுப்பது என்பது கொடூரத்திற்கு சமம் என கூறியிருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்