கேரளாவில் மீண்டும் ஆந்த்ராக்ஸ் நோய் பரவல் - சுகாதாரத்துறையினர் தீவிர கண்காணிப்பு

கேரளாவில் மீண்டும் பன்றிகளுக்கு ஆந்த்ராக்ஸ் தொற்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

Update: 2022-06-30 23:55 GMT

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் திருச்சூர் அருகே ஆதிரப்பள்ளி வனப்பகுதி உள்ளது. இயற்கை எழில் சூழ்ந்த இந்த பகுதி அழகான நீர்வீழ்ச்சியை கொண்டுள்ளது. இதனை பார்ப்பதற்காக நாடு முழுவதும் இருந்து சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம்.

இந்தநிலையில் நீர்வீழ்ச்சியோடு சேர்ந்த வனப்பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏராளமான காட்டு பன்றிகள் கூட்டம், கூட்டமாக செத்து கிடந்தன. இதுகுறித்த தகவல் அறிந்ததும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். பின்னர் இறந்த பன்றிகளின் மாதிரிகள் சோதனைக்காக ஆய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த பரிசோதனையில் பன்றிகளுக்கு ஆந்த்ராக்ஸ் தொற்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதாவது பன்றிகளின் உடலில் பாசில்லஸ் ஆந்த்ராசிஸ் என்ற பாக்டீரியா நோய் பரவியிருந்தது. இதையடுத்து மற்ற விலங்குகளுக்கும் ஆந்த்ராக்ஸ் பரவாமல் இருப்பதற்கு தீவிர நடவடிக்கை எடுக்க கேரள சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. அதே சமயத்தில் பன்றிகளின் உடல்களை புதைப்பதற்கும், பரிசோதனை நடத்துவதற்கும் சென்ற அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், "கேரளாவில் மீண்டும் ஆந்த்ராக்ஸ் நோய் பரவியுள்ளது. இது காற்றுமூலமாக வேகமாக பரவக்கூடியது அல்ல. எனவே பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. மற்ற விலங்குகளுக்கு பரவாமல் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என்றார். ஏற்கனவே கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் ஆந்த்ராக்ஸ் பரவல் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்