ராமநவமி பண்டிகையில் வன்முறை: என்.ஐ.ஏ. விசாரணைக்கு தடைகோரிய மே.வங்காள அரசின் மனு தள்ளுபடி - சுப்ரீம் கோர்ட்டு

மேற்குவங்காளத்தில் ராமநவமி பண்டிகையின் போது பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்தது.

Update: 2023-07-24 10:37 GMT

டெல்லி,

இந்து மத பண்டிகையான ராம நவமி கடந்த மார்ச் மாதம் 30-ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இந்த பண்டிகையின் போது பல இடங்களில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறின.

அந்த வகையில் மேற்குவங்காளத்தின் ஹவுரா மாவட்டம் ஷகிப்பூர் மற்றும் ஹூக்ளி மாவட்டம் ரிஷாரா பகுதிகளில் ராமநவமி பண்டிகையின் போது வன்முறை சம்பவங்கள் அரங்கேறியது.

இந்த வன்முறை சம்பவங்கள் தொடர்பாக என்.ஐ.ஏ. விசாரணை நடத்த உத்தரவிடக்கோரி மேற்குவங்காள ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த மேற்குவங்காள ஐகோர்ட்டு கடந்த ஏப்ரல் 27ம் தேதி வழக்கை என்.ஐ.ஏ. விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது.

மேலும், இது தொடர்பாக பதிவு செய்த வழக்குகள், ஆவணங்கள், பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள், சிசிடிவி ஆதாரங்களை 2 வாரத்திற்குள் என்.ஐ.ஏ. வசம் ஒப்படைக்க வேண்டுமெனவும் மேற்குவங்காள போலீசாருக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

ராவநவமி பண்டிகையில் வன்முறை சம்பவங்கள் தொடர்பான வழக்கை என்.ஐ.ஏ. விசாரணைக்கு மாற்றி ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மேற்குவங்காள அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது.

இந்த மேல்முறையீட்டு மனு சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ராவநவமி பண்டிகையில் நடந்த வன்முறை சம்பவங்கள் குறித்து என்.ஐ.ஏ. விசாரணை நடத்த ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய சுப்ரீம் கோர்ட்டு மறுத்துவிட்டது. மேலும், மேற்குவங்காள அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவையும் சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது.

Tags:    

மேலும் செய்திகள்