பிரதமர் மோடியின் 'மனதின் குரல்' நிகழ்ச்சி; 30-ந்தேதி முதல் மீண்டும் ஆரம்பம்
பிரதமர் மோடியின் 'மனதின் குரல்' நிகழ்ச்சி வரும் 30-ந்தேதி முதல் மீண்டும் ஆரம்பமாக உள்ளது.
புதுடெல்லி,
'மனதின் குரல்' (மன் கீ பாத்) என்ற நிகழ்ச்சியின் வாயிலாக ஒவ்வொரு மாதமும் நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி வானொலியில் உரையாற்றி வருகிறார். கடந்த பிப்ரவரி மாதம் 25-ந்தேதி 'மனதின் குரல்' நிகழ்ச்சி ஒலிபரப்பான நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து மக்களவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று, இந்தியாவின் பிரதமராக 3-வது முறை மோடி பதவியேற்றுள்ள நிலையில், வரும் 30-த்தேதி முதல் 'மனதின் குரல்' நிகழ்ச்சி மீண்டும் ஆரம்பமாக உள்ளது. இது தொடர்பாக 'எக்ஸ்' தளத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது;-
"தேர்தல் காரணமாக சில மாத இடைவெளிக்குப் பிறகு, 'மனதின் குரல்' மீண்டும் வருகிறது என்பதை தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த மாத நிகழ்ச்சி வரும் 30-ந்தேதி, ஞாயிற்றுக்கிழமை நடைபெறும்.
இந்த நிகழ்ச்சிக்கான உங்கள் யோசனைகளையும், உள்ளீடுகளையும் பகிர்ந்து கொள்ளுமாறு அனைவரையும் அழைக்கிறேன். உங்கள் கருத்துகளை MyGov Open Forum, NaMo App-ல் எழுதுங்கள், அல்லது 1800 11 7800 என்ற எண்ணில் பதிவு செய்யுங்கள்."
இவ்வாறு மோடி தெரிவித்துள்ளார்.