வெயில் பாதிப்புகள் குறித்து பள்ளி குழந்தைகளுக்கு விளக்கம் அளிக்கப்பட வேண்டும்: பிரதமர் மோடி

வெயில் காலத்தை எதிர்கொள்வதற்கான முன்னேற்பாடுகள் குறித்து பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை நடந்தது.

Update: 2023-03-07 00:43 GMT

புதுடெல்லி,

உயர்மட்ட ஆலோசனை

குளிர்காலம் ஓய்ந்தநிலையில், வெயில் அளவு அதிகரித்து வருகிறது. மே மாதத்தைப் போன்ற வெயில் கொடுமையை பார்க்க முடிகிறது. இந்த ஆண்டு கோடை காலம் மிக மோசமான அனுபவத்தை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சூழ்நிலையில், வெயில் காலத்தை எதிர்கொள்வதற்கான முன்னேற்பாடுகள் குறித்து விவாதிக்க பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில், பிரதமரின் முதன்மை செயலாளர், மந்திரிசபை செயலாளர், உள்துறை செயலாளர் மற்றும் இதர அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தானியம் இருப்பு

இக்கூட்டத்தில், அடுத்த சில மாதங்களுக்கான வானிலை முன்னெச்சரிக்கை குறித்து பிரதமர் மோடிக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. பருவமழை குறித்தும், முக்கியமான பயிர்களின் சாகுபடி எந்த அளவுக்கு இருக்கும் என்றும் அதிகாரிகள் எடுத்துக்கூறினர்.

போதிய உணவு தானியங்களை இருப்பு வைக்குமாறு இந்திய உணவு கழகத்துக்கு உத்தரவிடப்பட்டு இருப்பதாக தெரிவித்தனர்.

அவசரநிலையை சமாளிப்பது தொடர்பாக மாநிலங்கள் மற்றும் ஆஸ்பத்திரி கட்டமைப்புகளின் தயார்நிலை பற்றியும் பிரதமருக்கு எடுத்துக்கூறப்பட்டது. அதிகமான வெப்பத்தால் ஏற்படும் பேரிடர்கள் மற்றும் அவற்றை தணிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும் தெரிவிக்கப்பட்டது.

அவற்றைக் கேட்டுக்கொண்ட பிரதமர் மோடி கூறியதாவது:-

டி.வி., வானொலியில் வானிலை அறிக்கை

இந்திய வானிலை ஆராய்ச்சி மைய அதிகாரிகள், எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் தினந்தோறும் வானிலை அறிக்கைகளை தயாரிக்க வேண்டும். டி.வி. செய்தி சேனல்களும், பண்பலை வானொலிகளும் நாள்தோறும் சில நிமிடங்கள் ஒதுக்கி, அவற்றை வாசிக்க வேண்டும். அதன்மூலம் மக்கள் தங்களை தயார்படுத்திக்கொள்வார்கள்.

ஆஸ்பத்திரிகளில் தீதடுப்பு ஏற்பாடுகள் குறித்து தணிக்கை செய்யப்பட வேண்டும். தீயணைப்பு வீரர்களை கொண்டு தீதடுப்பு ஒத்திகை நடத்தப்பட வேண்டும்.

நீர்ப்பாசனத்துக்கான தண்ணீர் வினியோகம், கால்நடை தீவனம், குடிநீர் வினியோகம் ஆகியவற்றை கண்காணிக்க வேண்டும்.

பள்ளிகளில் விளக்கம்

வெயில் பாதிப்புகள் குறித்து பள்ளி குழந்தைகளுக்கு விளக்கம் அளிக்கப்பட வேண்டும். அதிகபட்ச வெப்பநிலை நிலவும்போது, என்னென்ன செய்ய வேண்டும், என்னென்ன செய்யக்கூடாது என்பதை துண்டு பிரசுரங்கள், சினிமாக்கள் உள்ளிட்டவை மூலம் விளம்பரப்படுத்த வேண்டும்.

காட்டுத்தீ பரவுவதை தடுக்கவும், அணைக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

 

Tags:    

மேலும் செய்திகள்