கனமழை எதிரொலி: கேரளாவில் வீட்டின் அருகிலேயே முதியவர் உடலை தகனம் செய்த உறவினர்கள்

கேரளாவில் பருவமழயால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக உயிரிழந்த முதியவரின் உடலை வீட்டின் அருகிலேயே வைத்து நவீன முறையில் உறவினர்கள் தகனம் செய்தனர்.

Update: 2023-07-12 14:25 GMT

திருவனந்தபுரம்,

கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு தாமதமாக தொடங்கியது. இருந்த போதிலும் கடந்த சில நாட்களாக மாநிலம் முழுவதும் கனமழை பெய்தது. இதன் காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆலப்புழா உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது. பல இடங்களில் மக்கள் வெள்ளத்தில் சிக்கி தவித்தனர். தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் முகாமிட்டு வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டு நிவாரண முகாம்களில் தங்க வைத்தனர்.

கடந்த சில நாட்களாக கேரள மாநிலத்தில் ஒரு சில மாவட்டங்களில் மட்டுமே மழை பெய்து வருகிறது. நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஆறுகளில் தண்ணீர் கரைபுரண்டு ஓடி வருகிறது. ஆலப்புழா மாவட்டத்தில் பல இடங்களில் குடியிருப்புகளை சூழ்ந்த தண்ணீர் இதுவரை வடியாததால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

அத்தியாவசிய தேவைக்கு மக்கள் வெளியே வந்து செல்ல முடியாத நிலை நீடித்து வருகிறது. இந்நிலையில் தாளவாடியில் விபத்தில் சிக்கி பலியான முதியவரின் உடலை அவரது குடும்பத்தினர், வெள்ளம் காரணமாக சுடுகாட்டிற்கு கொண்டு செல்ல முடியாமல் வீட்டின் அருகிலேய வைத்து நவீன முறையில் தகனம் செய்தனர். தாளவாடியைச் சேர்ந்த முதியவர் கோபி (வயது 72) கடந்த மாதம் 29-ந்தேதி சாலை விபத்தில் சிக்கினார். கோட்டயம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அவர், கடந்த 7-ந்தேதி இறந்தார். கனமழை காரணமாக பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு வீடு உள்ள பகுதியில் தண்ணீர் தேங்கியது.

இதனால் கோபியின் உடலை வீட்டிற்கு கொண்டு வராமல் ஆஸ்பத்திரியின் பிணவறையில் வைத்தனர். தொடர்ந்து வெள்ளம் வடியாமல் இருந்ததால் வீட்டிலேயே இறுதிச்சடங்கு நடத்தி, வீட்டின் அருகிலேயே நவீன முறையில் தகனம் செய்ய குடும்பத்தினர் முடிவு செய்தனர். அதன்படி, முதியவர் கோபியின் உடல் அவரது வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது. வீட்டில் இறுதிச் சடங்குகள் முடிந்ததும், அவரது வீட்டின் அருகிலேயே தண்ணீர் தேங்கி இருந்த நடமாடும் தகன மேடையில் நவீன முறையில் உடல் தகனம் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்