தொடர்ந்து 3-வது நாளாக நாடாளுமன்றம் முடக்கம் - இரு அவைகளும் மதியம் 2 மணி வரை ஒத்திவைப்பு

தொடர் அமளி காரணமாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

Update: 2023-03-15 06:27 GMT

புதுடெல்லி,

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு நேற்று முன்தினம் தொடங்கியது. ஆனால், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இந்திய ஜனநாயகம் தாக்குதலுக்கு ஆளாவதாக சமீபத்தில் லண்டனில் பேசியிருந்த உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து முதல் நாளிலேயே பா.ஜ.க. உறுப்பினர்கள் அவையில் கோஷம் எழுப்பினர்.

அவர்களுக்கு காங்கிரஸ் எம்.பி.க்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், அதானி விவகாரத்தையும் அவையில் எழுப்பி கோஷங்கள் எழுப்பினர். இதனால் இரு அவைகளிலும் கடும் அமளி நிலவியதால் முதல் நாளன்று இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.

இந்த விவகாரம் 2-வது நாளாக நேற்றும் இரு அவைகளிலும் புயலை கிளப்பியது. மக்களவையில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி எம்.பி.க்களின் அமளி தொடரவே, அவையை பிற்பகல் 2 மணி வரை சபாநாயகர் ஓம் பிர்லா ஒத்திவைத்தார்.

பின்னர் மீண்டும் கூடியபோதும், அமளி தொடர்ந்ததால் மக்களவையை நாள் முழுவதும் ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்தார். மாநிலங்களவையும் இந்த பிரச்சினைகளால் நேற்று ஸ்தம்பித்தது. இதனால் மாநிலங்களவை பிற்பகல் 2 மணி வரையும், பின்னர் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வின் முதல் 2 நாட்களும் குறிப்பிடத்தக்க அலுவல்கள் எதுவும் நடைபெறாமல் நாடாளுமன்ற இரு அவைகளும் முடங்கியது.

இந்த நிலையில் இன்று 3-வது நாள், காலை 11 மணிக்கு மக்களவை தொடங்கிய நிலையில், ராகுல் காந்தியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து பா.ஜ.க. உறுப்பினர்களும், அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை கோரி எதிர்கட்சி உறுப்பினர்களும் தொடர்ந்து முழக்கங்களை எழுப்பினர்.

இதனால் அவை தொடங்கிய சில நிமிடங்களிலேயே மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. அதே சமயம் மாநிலங்களவையில், இன்று சில அறிக்கைகளை தாக்கல் செய்த பின்னர், மாநிலங்களவையின் வழக்கமான அலுவல்களை ஒத்திவைத்துவிட்டு அதானி குழும விவகாரம் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என எதிர்கட்சி உறுப்பினர்கள் அளித்த நோட்டீசை ஏற்க முடியாது என்று மாநிலங்களவை தலைவர் ஜகதீப் தன்கர் அறிவித்தார்.

அதே சமயம் ஆளுங்கட்சி உறுப்பினர்களும் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று முழக்கங்களை எழுப்பினர். இருதரப்பினரும் தொடர்ந்து முழக்கம் எழுப்பியதால், மாநிலங்களவையும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்